ஞானசார தேரர் விவகாரம்: பேச்சுவார்த்தைக்காக பௌத்த சாசன அமைச்சுக்கு சென்ற பிக்குகள்
கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வெண. கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள், இன்று (16) பௌத்த சாசன அமைச்சுக்கு சென்றுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைச்சு வாய்ப்பளித்துள்ளதாகவும், இதன்போது நான்கு பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று காலை அகற்றியதைத் தொடர்ந்து பிக்குகள் அமைச்சுக்குச் சென்றுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில், உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக பொலிஸார் முன்வைத்த கவலைகளைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குறித்த பகுதியில் போராட்டம் நடத்துவதற்குத் தடை விதித்திருந்தது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பொலிஸார் வாசித்துக் கையளித்தனர். அதனைத் தொடர்ந்து காலி வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களைப் பிக்குகள் அகற்றினர்.
‘சீவரத்திற்கு நீதி – விடுதலைக்கான நடைபயணம்’ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம், கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாகும்.
இதன் தொடர்ச்சியாக, அரசாங்கத்திடமிருந்து அவரது விடுதலை தொடர்பில் உறுதியான பதிலைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், பிக்குகள் கடந்த வியாழக்கிழமை (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் சென்றனர். பின்னர் அங்கு அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், இரவு முழுவதும் அப்பகுதியிலேயே தங்கியிருந்தனர்.
இதற்கிடையில், தங்களது முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக நீதிமன்றத்தை அணுகியிருந்த போதிலும், தேவையான சட்ட அனுமதியையோ நிவாரணத்தையோ பெற்றுக்கொள்ள முடியவில்லை என வண. பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும், சீவரம் வழங்குதல் தொடர்பான விடயங்களுக்கான பொறுப்பு பௌத்த அலுவல்கள் ஆணையாளருக்கு உரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, இன்று இரவும் பௌத்த சாசன அமைச்சுக்கு அருகில் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளதாக வண. பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.