ஷிராந்தி ராஜபக்சவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை அவசியம் – நீதிமன்றில் மருத்துவ அறிக்கை சமர்ப்பிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷிராந்தி ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கையைப் பரிசீலித்த நீதவான், அதில் ஷிராந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பான விபரங்களும், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதன் அவசியமும் குறிப்பிடப்பட்டுள்ளதாக திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரால் அனுப்பப்பட்ட கடிதத்துடன் இந்த மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, மருத்துவ அறிக்கையை ஆராய்ந்த பின்னர் அது தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோரிக்கை விடுத்தார்.
தேசிய சேமிப்பு வங்கியினால் ‘சிரிலிய சவிய’ அமைப்புக்கு வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையில், ஷிராந்தி ராஜபக்ச தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.