தனிப்பயர் வாகன இலக்கத் தகடுகளை அறிமுகப்படுத்த இலங்கை பரிசீலனை!
இலங்கையில் வாகனங்களின் வழக்கமான பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, தனிநபர் பெயர்கள் அல்லது வர்த்தக நிறுவனங்களின் பெயர்களைக் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட இலக்கத் தகடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான நாடாளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அண்மைய கூட்டத்தில் இது தொடர்பான முன்மொழிவு கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.
இந்த முன்மொழிவின்படி, வாகன உரிமையாளர்கள் தங்களது தனிப்பட்ட பெயர்கள் அல்லது வர்த்தக நிறுவனங்களின் பெயர்களைப் பொறித்த தனிப்பயனாக்கப்பட்ட இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், வாகன உரிமையாளர்களுக்குக் கூடுதல் தெரிவுகளை வழங்குவதோடு, அரசாங்கத்தின் வருமானத்தையும் அதிகரிக்கும் நோக்கில் விசேட வாகனப் பதிவு இலக்கங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அதன் தொழில்நுட்ப, சட்ட மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையின் வாகனப் பதிவு முறையை நவீனமயப்படுத்துவதுடன், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை மேம்படுத்தும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
எவ்வாறாயினும், தனிப்பயனாக்கப்பட்ட வாகன இலக்கத் தகடுகளை அறிமுகப்படுத்துவதற்கான கால அட்டவணை அல்லது அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டண விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.