ஞானசார தேரரை விடுவிப்பதற்காக சட்டத்தை மாற்ற முடியாது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பௌத்த பிக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், எந்தவொரு தனிநபருக்காகவும் அரசாங்கம் சட்டத்தை வளைக்கவோ மாற்றியமைக்கவோ நடவடிக்கை எடுக்காது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சட்டம் என்பது அதிகாரம், அரசியல் செல்வாக்கு அல்லது சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கும், அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றமைக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று, முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் சட்டம் சமமற்ற முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்பட்ட அதிருப்தியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாதாரண பொதுமக்களுக்கு ஒரு விதமாகவும், அரசியல் அதிகாரம் அல்லது செல்வாக்கு மிக்க பதவிகளில் இருப்பவர்களுக்கு மற்றொரு விதமாகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட சம்பவங்களை மக்கள் நேரடியாகக் கண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய நடைமுறைகளுக்கு முடிவுகட்டி, ஒருவரின் பதவி அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த எதிர்பார்ப்பு அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களிடம் மட்டுமன்றி, வாக்களிக்காத மக்களிடமும் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
### நீதிமன்றத் தீர்ப்பில் அரசாங்கம் தலையிட முடியாது
முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பைப் போன்றதொரு நடவடிக்கையின் மூலம் ஞானசார தேரரை விடுதலை செய்ய முடியுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ஞானசார தேரருக்கு எதிரான தண்டனை நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிமை உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஒருவரின் அடையாளம் அல்லது சமூக அந்தஸ்தைக் கருத்திற்கொண்டு விதிவிலக்குகளை வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு தனிநபரின் நலனுக்காகச் சட்டத்தை மாற்றியமைக்கவோ அதில் சலுகைகளை வழங்கவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கவில்லை எனவும், அனைத்து முடிவுகளும் நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே எடுக்கப்படும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம்
இதற்கிடையில், ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பௌத்த பிக்குகள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஒக்டோபர் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட “சீவரத்துக்கு நீதி – விடுதலைப் பேரணி” எனப் பெயரிடப்பட்ட பேரணி, ஒக்டோபர் 15ஆம் திகதி கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தைச் சென்றடைந்தது.
அங்கு தங்கியிருந்த போராட்டக்காரர்கள், அரசாங்கத்திடமிருந்து உறுதியான பதிலொன்றைக் கோரியிருந்தனர்.
எனினும், குறித்த பகுதியில் போராட்டங்களை நடத்துவதற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, பிக்குகள் தங்களது தற்காலிக கூடாரங்களை அகற்றிவிட்டு இன்று (16) புத்தசாசன அமைச்சுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் சார்பில் நான்கு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சு வாய்ப்பளித்துள்ளது.
புத்தசாசன அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற மகா சங்கத்தினர், ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் தங்கியிருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.