30 தகுதிக் குறைப்பு புள்ளிகளைப் பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்!
இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான தகுதிக் குறைப்பு புள்ளி முறையின் கீழ், 30 புள்ளிகளைப் பெறும் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரம் தானாகவே இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிமுறைகளைத் தொடர்ச்சியாக மீறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும், வீதி பாதுகாப்பை மேம்படுத்துவதும் இந்தப் புதிய முறையின் பிரதான நோக்கமாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தத் திட்டம் ஆறு மாதகால முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இத்திட்டம் 2027 மார்ச் 31ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய முறையின் கீழ், சாரதிகள் மேற்கொள்ளும் போக்குவரத்து விதிமீறல்களின் தன்மை மற்றும் தீவிரத்தன்மைக்கு ஏற்ப அவர்களின் சாரதி பதிவில் தகுதிக் குறைப்பு புள்ளிகள் சேர்க்கப்படும்.
ஒரு சாரதி 30 புள்ளிகளைப் பெற்றவுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரம் தானியங்கி முறையில் இடைநிறுத்தப்படும். இவ்வாறு அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்படும் சாரதிகள், அதனைத் தமக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
பொதுவாக, சாரதி அனுமதிப்பத்திர இடைநிறுத்தக் காலம் ஒரு வருடமாக இருக்கும். எனினும், உரிய பயிற்சித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்யும் சாரதிகளுக்கு இந்தக் காலத்தை மூன்று மாதங்களாகக் குறைத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர், சம்பந்தப்பட்ட விதிமீறலுக்காக தமது பதிவில் சேர்க்கப்படும் தகுதிக் குறைப்பு புள்ளிகள் தொடர்பான தகவல்கள் குறுஞ்செய்தி (SMS) மூலம் சாரதிகளுக்கு அறிவிக்கப்படும்.
இந்தத் திட்டம் சாரதிகளை அச்சுறுத்துவதற்காகக் கொண்டுவரப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதுடன், வீதி விபத்துகளைக் குறைத்து பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
புதிய முறை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர், அதுகுறித்து சாரதிகளைப் பழக்கப்படுத்தும் நோக்கிலேயே முன்னோடித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.