சவூதி அரேபியாவுக்கான விமானப் பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம் – உம்ரா பயண ஏற்பாட்டாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
சவூதி அரேபியாவுக்கான விமானப் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்பதால், உம்ரா யாத்திரைகளை ஏற்பாடு செய்யும் அனைத்து பதிவு செய்யப்பட்ட பயண முகவர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை ஹஜ் மிஷன் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இலங்கை ஹஜ் மிஷனால் 2026 ஒக்டோபர் 16ஆம் திகதி இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலைகள் மற்றும் சவூதி அரேபியாவிற்கான விமானப் பயணங்களில் ஏற்படக்கூடிய இடையூறுகளைக் கருத்திற்கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஜித்தாவில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை அறிவிப்பொன்றையும் வெளியிட்டிருந்தது.
போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சவூதி அரேபியாவுக்குப் பயணம் செய்த கணிசமான எண்ணிக்கையிலான யாத்திரிகர்கள், தற்போது அந்நாட்டில் கடுமையான சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைக் கருத்திற்கொண்டு, உம்ரா பயணங்களை ஏற்பாடு செய்யும் முகவர்கள், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் யாத்திரிகர்களுக்கு பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை, விமானப் பயணங்களில் ஏற்படக்கூடிய இடையூறுகள் மற்றும் மாற்றுத் திட்டங்களைத் தயாராக வைத்திருப்பதன் அவசியம் குறித்து முழுமையாகத் தெளிவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உரிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் தற்போதைய சூழ்நிலைகளையும் கவனத்தில் கொள்ளாமல் பயண ஏற்பாடுகளை முன்னெடுக்கும் முகவர்கள், அதனால் ஏற்படும் அபாயங்கள், இழப்புகள் மற்றும் சட்டரீதியான விளைவுகளுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டியிருக்கும் எனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அத்துடன், இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறுவதால் ஏற்படும் சிரமங்கள் அல்லது இழப்புகளுக்கு சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு, இலங்கை ஹஜ் மிஷன், ஹஜ் மற்றும் உம்ரா குழு மற்றும் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவை பொறுப்பேற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இலங்கை உம்ரா யாத்திரிகர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து பயண ஏற்பாட்டாளர்களும் பொறுப்புடன் செயற்பட்டு, வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைத் தவறாது பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.