இலங்கையில் 16 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள், வாகன இலக்கத் தகடுகள் விநியோகிக்கப்படாமல் தேக்கம்!
இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் மற்றும் வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, 16 இலட்சத்துக்கும் அதிகமான அட்டைகள் மற்றும் இலக்கத் தகடுகள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றக் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளை விரைவாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, அச்சிடும் உபகரணங்கள் மற்றும் வெற்று அட்டைகளுக்கான தட்டுப்பாடு காரணமாக சுமார் 6 இலட்சத்து 73 ஆயிரம் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் விநியோகிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற விமானப்படை வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவிக்கையில், ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ள 10 இலட்சம் அட்டைகளின் கையிருப்பு 2027 ஜனவரி மாதத்துடன் தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், புதிதாக 20 இலட்சம் அட்டைகளை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள போதிலும், அதன் முதலாவது தொகுதி 2027 மார்ச் மாத இறுதியிலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ஏற்படக்கூடிய அட்டைகளுக்கான தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காக, தற்போதைய விநியோகஸ்தரிடமிருந்து மேலும் 5 இலட்சம் அட்டைகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நிலுவையை 2027ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் முழுமையாகத் தீர்க்க முடியும் என ஆணையாளர் நாயகம் நம்பிக்கை வெளியிட்டார்.
9.5 இலட்சத்துக்கும் அதிகமான வாகன இலக்கத் தகடுகளும் நிலுவை!
இதற்கிடையில், 2025 ஜனவரி 1ஆம் திகதி முதல் 2026 மார்ச் 9ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குவிந்த விண்ணப்பங்களின் அடிப்படையில், 9 இலட்சத்து 58 ஆயிரத்து 651 வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் இன்னமும் விநியோகிக்கப்படாமல் உள்ளதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய ஒப்பந்ததாரருக்கு உரிய உற்பத்திப் பணிகளை ஒப்படைத்தால், இந்த நிலுவையை ஏழு முதல் எட்டு மாதங்களுக்குள் முழுமையாகத் தீர்க்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இந்தத் தாமதங்களை விரைவாகத் தீர்ப்பதற்கும், சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளை விநியோகிக்கும் நடைமுறையை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.