பிரபல சமூக ஊடகப் பிரபலம் நயோமி சானின் மறைவுக்கு அமைச்சர் சரோஜா பௌல்ராஜ் இரங்கல்
பிரபல சமூக ஊடகப் பிரபலமான நயோமி சானின் மறைவுக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பௌல்ராஜ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பிரசவத்தின்போது ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக நயோமி சான் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவரது மறைவு குறித்து இரங்கல் வெளியிட்டுள்ள அமைச்சர் சரோஜா பௌல்ராஜ், சமூக ஊடகங்களில் தனக்குக் கிடைத்த பிரபல்யத்தை சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நயோமி சான் பயன்படுத்தியதைப் பாராட்டியுள்ளார்.
குறிப்பாக பெண்கள், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெறுமனே புகழையும் அங்கீகாரத்தையும் தேடுவதற்கு அப்பால், சமூகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குத் தனது சமூக ஊடகத் தளத்தை நயோமி சான் பயன்படுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நயோமி சான் பகிர்ந்துகொண்ட காணொளி ஒன்றை நினைவுகூர்ந்த அமைச்சர், பெண்களின் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் பெண்களைப் பாதுகாப்பதில் சமூகத்திற்குள்ள பொறுப்பு குறித்து அவர் எளிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதை நினைவுகூர்ந்துள்ளார்.
அத்துடன், நயோமி சானின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள அமைச்சர், இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையும் தைரியமும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.