இலங்கையின் பல பகுதிகளில் கடும் இடியுடன் கூடிய மழை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும் அபாயம்!
இலங்கையின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (11) பிற்பகல் 1.00 மணி முதல் நாளை (12) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகக் காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடற்பிராந்தியங்களில் தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மன்னார், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அம்பாறை, அனுராதபுரம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது அடிக்கடி மின்னல் தாக்கங்கள், பலத்த காற்று, திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், மரங்கள் முறிந்து விழுதல், வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுதல், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் தடைப்படுதல், வீதி, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகளில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இடியுடன் கூடிய மழை நெருங்கும் வேளைகளில் விவசாயம், கட்டுமானப் பணிகள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திறந்தவெளிகள், கடற்கரைகள், மலை உச்சிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் இருப்பதைத் தவிர்த்து, மின்னல் தாக்கங்களின்போது பாதுகாப்பான கட்டடங்களுக்குள் அல்லது மூடப்பட்ட வாகனங்களுக்குள் தஞ்சமடையுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் மற்றும் சிறிய படகுகளைப் பயன்படுத்துவோர் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், கடலில் இருப்பவர்கள் ஆபத்தான வானிலை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு முன்கூட்டியே கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், மரங்கள் நிறைந்த வீதிகள் மற்றும் வெள்ளநீர் தேங்கியுள்ள பாதைகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும், வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடும் எச்சரிக்கைகளை அவதானித்து செயற்படுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.