யானைகள் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்திய சஜித் – 1961ஆம் ஆண்டு தந்தை எடுத்த அரிய புகைப்படத்தை நினைவுகூர்ந்தார்
இலங்கையின் புகழ்பெற்ற யானையான ‘வலஸ்கேமா தந்தம் கொண்ட யானையின்’ அரிய புகைப்படம் ஒன்றை, தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாச 1961ஆம் ஆண்டு எடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையின் வனவிலங்கு புகைப்படக் கலைஞராகவும் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் விளங்கிய தனது தந்தை, யானைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைத் தனக்கு உணர்த்தியதாக அவர் வெளியிட்டுள்ள காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
காவன்திஸ்ஸ என்ற யானையின் அண்மைய மரணத்தைத் தொடர்ந்து வெளியிட்ட இந்தச் செய்தியில், தனது தந்தை முதன்முதலில் புகைப்படம் எடுத்த யானை ‘வலஸ்கேமா தந்தம் கொண்ட யானை’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யால தேசிய பூங்காவின் இரண்டாம் வலயத்தில் அமைந்துள்ள வலஸ்கேமா பகுதியில் வறட்சிக் காலங்களில் நீர் பற்றாக்குறை நிலவும்போது, இந்த யானை அப்பகுதிக்கு வருவது வழக்கமாக இருந்துள்ளது.
அங்கு நீர் அருந்துவதற்காக அந்த யானை முழங்காலிட்டு அமர வேண்டியிருந்ததாகவும், அவ்வாறு நீர் அருந்தியபோது பாறையில் ஏற்பட்ட பள்ளம் இன்றும் காணப்படுவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகாலை 6 மணியளவில் இந்த அரிய புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், அதனைப் படம்பிடிப்பதற்காக தனது தந்தை முந்தைய இரவே குறித்த பகுதிக்குச் சென்றிருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
இலங்கையில் மிகச் சில புகைப்படக் கலைஞர்களே இந்த யானையைப் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் புகைப்படத்தைப் பொதுமக்களுக்கும் குறிப்பாக இளம் தலைமுறையினருக்கும் பகிர்ந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இலங்கையின் யானை இனத்தைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவன்திஸ்ஸ யானையின் அண்மைய மரணம் குறித்து கவலை வெளியிட்ட சஜித் பிரேமதாச, இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவது தொடர்பிலும் சுட்டிக்காட்டியதுடன், யானைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.