2027ஆம் ஆண்டு முதல் தரம் 6 பாடத்திட்டத்தில் தொழில்முனைவோர் கல்வி மற்றும் நிதியியல் அறிவு
2027ஆம் ஆண்டு முதல் தரம் 6 பாடத்திட்டத்தில் தொழில்முனைவோர் கல்வி மற்றும் நிதியியல் அறிவு தொடர்பான பாடங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் வளாகத்தில் நேற்று முன்தினம் (10) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் நிதியியல் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதுடன், குறிப்பாக இளம் தலைமுறையினரை நிதி மோசடிகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கிலும், கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவுகளைத் தெரிவுசெய்யும் மாணவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த வர்த்தகக் கல்வி, இனிவரும் காலங்களில் தரம் 6 முதல் அனைவருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான திறன்களில் ஒன்றாக அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டின் ஒட்டுமொத்த நிதியியல் அறிவை மேம்படுத்துவது அவசியமானது என வலியுறுத்திய அவர், குறிப்பாக இளம் தலைமுறையினர் நிதி மோசடிகளுக்கு இரையாகாமல் பாதுகாப்பதற்கு இத்தகைய கல்வி முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், 2026ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மூன்று கட்டங்களாக நாடளாவிய ரீதியில் 100 செயற்பாட்டு அடிப்படையிலான வர்த்தகக் கல்வி மையங்களை நிறுவும் திட்டத்தையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, இந்த ஆண்டு 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 25 கல்வி மையங்கள் நிறுவப்படவுள்ளன. இதன் மூலம் வர்த்தகக் கல்வியை நடைமுறைச் செயற்பாடுகளுடன் இணைத்து மாணவர்களுக்கு வழங்குவதே நோக்கமாகும்.
அனைவரையும் தொழில்முனைவோராக மாற்றுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல எனக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பொருளாதார நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகப் பொறுப்பு மற்றும் மனிதாபிமான விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்கும் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அகில இலங்கை வர்த்தக அறிவுப் போட்டி மற்றும் தொழில்முனைவோர் திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்விலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்போது வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், வர்த்தகக் கல்விக்கான புதிய கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்தும் மேலதிக கற்றல் வழிகாட்டிகள் மற்றும் பாடத் தொகுதிகளும் வெளியிடப்பட்டன.