இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கான ஆளில்லா ட்ரோன் சோதனை வெற்றி – அமைச்சரும் பயணம்
இலங்கையில் முதன்முறையாக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆளில்லா ட்ரோன் விமானத்தின் உத்தியோகபூர்வ செயல்விளக்கப் பரீட்சார்த்தம் இன்று (11) கொழும்பு துறைமுக நகரில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க குறித்த ட்ரோன் விமானத்தில் பயணித்தார்.
பயணத்தை நிறைவு செய்து தரையிறங்கிய பின்னர் தனது அனுபவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “நான் பறப்பதைப் போல உணர்ந்தேன்” எனக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ட்ரோன்கள் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கான வணிகச் சேவைகள் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மின்சாரத்தில் இயங்கும் செங்குத்தாக மேலெழுந்து தரையிறங்கக்கூடிய (eVTOL) விமானங்களைப் பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாத்துறை மற்றும் அவசரகால சேவைகளை முன்னெடுப்பது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை அதிகாரிகளுக்கும் சீனாவின் பயணிகள் ட்ரோன் உற்பத்தி நிறுவனமான Yi Hang பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
இந்தத் திட்டம் ஆரம்பத்தில் பரீட்சார்த்த அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதுடன், கொழும்பு துறைமுக நகரில் ஆறு மாத காலத்துக்கு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து வணிக ரீதியான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இரண்டு பயணிகள் பயணிக்கக்கூடிய E216 ரக ட்ரோன் விமானம் அண்மையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் 16 உந்துவிசிறிகள் (Propellers), 12 மின்கலத் தொகுதிகள், மூன்று விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த மத்திய கணினி அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
இந்த விமானம் விமானி இன்றி மத்திய கட்டுப்பாட்டு நிலையத்தின் ஊடாகத் தொலைவிலிருந்து இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவசரநிலைகள் அல்லது தொடர்பாடல் துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்களில் தானாகச் செயற்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை விமானப்படை, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அவசியமாகும்.