2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூலதன ஒதுக்கீடாக ரூ.2 டிரில்லியன்
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார விரிவாக்கம் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்களை இலக்காகக் கொண்டு 2 டிரில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் அடங்கிய இறுதி ஆவணத்தை, நாளை (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பரிசீலனை செய்துள்ளார்.
இந்த நிகழ்வில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும் கலந்துகொண்டுள்ளார்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாளை பிற்பகல் நாடாளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், பொருளாதாரத்தை விரிவுபடுத்தி நீண்டகால அபிவிருத்தியை ஊக்குவிப்பதையும் இந்த வரவு செலவுத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
டித்வா சூறாவளி அனர்த்தம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய நெருக்கடி உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரத்தின் பல முக்கிய துறைகளில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வினைத்திறனான பொருளாதார முகாமைத்துவம் மற்றும் வலுவான நிதி ஒழுக்கம் ஆகியவற்றின் ஊடாகவே இந்த முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 20ஆம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அத்துடன், குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.