ரூ. 16.6 மில்லியன் அரச நிதி முறைகேடு வழக்கு: ரணில் விக்கிரமசிங்கவுக்கு டிசம்பர் 9ஆம் திகதி மீண்டும் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
2023ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்துக்கான பயணத்தின்போது, ரூ. 16.6 மில்லியனுக்கும் அதிகமான அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் நடைபெற்ற அவரது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக மேற்கொண்ட பயணத்துடன் தொடர்புடைய அரச நிதிப் பயன்பாடு குறித்தே இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்றைய நீதிமன்ற விசாரணையின்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டிருந்தார்.
குறித்த வெளிநாட்டுப் பயணத்துடன் தொடர்புடைய அரச நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.