முதலாவது BIMSTEC சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் தலைவராக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு
முதலாவது BIMSTEC சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் தலைவராக இலங்கையின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (11) ஆரம்பமான இந்தக் கூட்டம், கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஏழு BIMSTEC உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெறுகிறது.
இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் பொறுப்பு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கூட்டத்தில் உரையாற்றிய இந்திய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஊடாக அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், பொது சுகாதார உட்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் சுகாதார சேவைகள் தொடர்பான முயற்சிகள் குறித்தும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
சுகாதாரப் பாதுகாப்பு, தொற்றுநோய்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகள், 'ஒரே சுகாதாரம்' (One Health) அணுகுமுறை மற்றும் பாரம்பரிய மருத்துவம் ஆகிய துறைகளில் BIMSTEC உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்தியாவின் அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் ஏனைய உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாரம்பரிய மருத்துவத் துறையில் கூட்டு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில், குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் BIMSTEC பாரம்பரிய மருத்துவ சிறப்பு மையத்தை (Centre of Excellence in Traditional Medicine) நிறுவுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கிய BIMSTEC அமைப்பின் இந்த முதலாவது சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில், பிராந்திய பொது சுகாதாரப் பாதுகாப்பு, தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துதல், அவசரகால முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத் தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படுகின்றன.
இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் பொறுப்பை இலங்கை ஏற்றுள்ளமை, பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதிலும் இலங்கை வகிக்கும் தலைமைத்துவப் பங்கைப் பிரதிபலிப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, 2025 ஒக்டோபரில் கொழும்பில் நடைபெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 78ஆவது அமர்வின்போதும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அத்துடன், 2026 ஒக்டோபரில் தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் (UNESCAP) ஐந்தாவது ஆசிய பசுபிக் அமைச்சர்கள் மாநாட்டின் துணைத் தலைவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.