2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்க நாளை (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு நாளை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், இதன்போது ஜனாதிபதி வரவு – செலவுத் திட்ட உரையை நிகழ்த்தவுள்ளார். இது 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பாக அமையும் என நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை மொத்தம் 26 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இதன்படி, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், அதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 20ஆம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதேவேளை, குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதில் நான்கு சனிக்கிழமைகளும் உள்ளடங்குகின்றன.
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை, வரவு – செலவுத் திட்டக் காலப்பகுதியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நேர அட்டவணையையும் நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
இதன்படி, நிலையியற் கட்டளைகள் 22(1) முதல் 22(6) வரையிலான நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை இடம்பெறும்.
வாய்மூல விடைக்கான ஐந்து வினாக்கள் காலை 10 மணி முதல் 10.30 மணி வரை எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. தொடர்ந்து, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினா காலை 10.30 மணி முதல் 11 மணி வரை இடம்பெறும்.
வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதம் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
எனினும், வாக்கெடுப்புகள் நடைபெறவுள்ள நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 14ஆம் திகதிகள் தவிர்ந்த ஏனைய நாட்களில், மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஒத்திவைப்பு நேரப் பிரேரணைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.