திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: வண. பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு பிடியாணை
திருகோணமலை கடற்கரையோரத்தில் உரிய சட்ட அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய வண. பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன்போது, வண. பலாங்கொடை கஸ்ஸப தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை கடற்கரையோரத்தில் உரிய சட்ட அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டமை உள்ளிட்ட அனுமதியற்ற கட்டுமானப் பணிகள் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் 14 பேர் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். அவர்களில் வண. பலாங்கொடை கஸ்ஸப தேரர் இரண்டாவது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வண. கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சில சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், மேலும் ஒன்பது சந்தேகநபர்களை நாளை (12) திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் மேலதிக விசாரணை 2027 ஜனவரி 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.