தென் கொரியாவிலும் அரசியல் வலையமைப்பை விரிவுபடுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, தனது சர்வதேச அரசியல் வலையமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தென் கொரியாவின் சியோல் நகரில் கட்சி ஆதரவாளர்களின் சந்திப்பொன்றை நடத்தியுள்ளது.
கட்சியின் பிரதிநிதியான மிலிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
கடினமான பணி அட்டவணைகளுக்கு மத்தியிலும், Lotus Korea அமைப்புடன் தொடர்புடைய இளம் இலங்கைத் தொழிலாளர்களால் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் லண்டன், பேர்மிங்ஹாம் மற்றும் மெல்பேர்ன் ஆகிய நகரங்களில் கட்சியின் வெளிநாட்டுக் கிளைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தேசிய அமைப்பு ரீதியான தலைமையின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சியோலில் நடைபெற்ற சந்திப்பில், கட்சியின் வெளிநாட்டுக் கிளைத் தலைமையகத்தின் பிரதிநிதிகளாக தாமும் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்னவும் கலந்துகொண்டதாக மிலிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் பங்கேற்பதற்காக சில ஆதரவாளர்கள் 200 முதல் 300 கிலோமீற்றர் வரையான தூரத்தைக் கடந்து வந்ததாகவும், தங்களுக்குக் கிடைத்த ஒரேயொரு விடுமுறை நாளையும் இதற்காக அர்ப்பணித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வித நிதி அல்லது தனிப்பட்ட பிரதிபலன்களையும் எதிர்பார்க்காமல் அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, தென் கொரியாவில் உள்ள ஜே.வி.பி ஆதரவாளர்களால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாய்மொழி ரீதியான அவதூறுகள், சமூக ஊடகங்கள் ஊடான தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகளுக்கு முகங்கொடுத்ததாகவும் மிலிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் சந்திப்பை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தவர்களை அவர் பாராட்டியுள்ளார்.
நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கட்சியின் அரசியல் அமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
நீதி மற்றும் நியாயம் நிலவும் நாட்டை உருவாக்கும் இலக்குடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்துச் செல்லும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.