பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன வழக்கு: நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷ் சாலே
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சாலே, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக இன்று (16) நிரந்தர மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலே, குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லங்கா ஈ நியூஸ் (Lanka eNews) இணையத்தளத்துடன் இணைந்து பணியாற்றிய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி காணாமல் போனார். அப்போது இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களே எஞ்சியிருந்தன.
அந்தக் காலப்பகுதியில் எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவான கட்டுரைகளை வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஊடகவியலாளர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த, இதுவரை தீர்க்கப்படாத வழக்குகளில் ஒன்றாகப் பிரகீத் எக்னெலிகொடவின் காணாமல்போன சம்பவம் கருதப்படுகிறது.