பன்னிப்பிட்டியவில் பழைய இரும்புப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
பன்னிப்பிட்டிய, தெபானம பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்புப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரெள்ளை வீதியில், பொல்வத்த சந்திக்கு அருகில் அமைந்துள்ள குறித்த விற்பனை நிலையத்தில் காலை 9.05 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் விற்பனை நிலையத்திற்கும் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த கோட்டை மாநகர சபைக்குச் சொந்தமான மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தீயணைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.