“கடனை அடைக்கவும், மீனாட்சிக்கு உதவவும் பணம் இல்லை” – நகைக் கொள்ளை வழக்கில் நிஷாந்த் வாக்குமூலம்
மதுரை தனிஷ்க் நகைக் கடையில் 11.384 கிலோகிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட யூடியூபர் நிஷாந்த், கடன் சுமை காரணமாகவே கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மதுரை நேரு நகர் அருட்பெருஞ்ஜோதி நகரைச் சேர்ந்த சுரேஷின் மகனான 24 வயதுடைய நிஷாந்த், இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியாகக் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் அவரது தோழி மீனாட்சி ஆகியோரும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும், கொள்ளைச் சம்பவத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என மீனாட்சி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நிஷாந்தை ஒருநாள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து, அவரைக் காவலில் எடுத்த பொலிஸார் சேலத்துக்கு அழைத்துச் சென்று, கொள்ளைக்குப் பின்னர் மதுரையிலிருந்து சேலத்துக்குச் செல்லப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை மீட்டனர்.
மேலும், சேலத்தில் நிஷாந்துக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் மூன்று நண்பர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர். அவர்களைப் பேருந்தில் ஏற்றி அனுப்பியவர்கள் தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. குறித்த மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பின்னர் நிஷாந்தை மீண்டும் மதுரைக்கு அழைத்து வந்த பொலிஸார், கொள்ளை இடம்பெற்ற நகைக் கடை, அவரது வீடு மற்றும் நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்த மாடக்குளம் கண்மாய் பகுதி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, இரும்புச் சாரத்தின் வழியாக நகைக் கடைக்குள் நுழைந்த விதம், பாதுகாப்புக் கெமராக்களின் காட்சிகளைத் தடுக்க ஸ்பிரே பயன்படுத்தியமை, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றமை மற்றும் அவற்றை மாடக்குளம் பகுதியில் புதைத்து வைத்தமை உள்ளிட்டவற்றை நிஷாந்த் நடித்துக் காட்டியுள்ளார். இவை அனைத்தையும் பொலிஸார் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், கொள்ளைக்குப் பயன்படுத்திய கடப்பாறை, ஸ்பிரே, கையுறைகள் மற்றும் முகமூடி உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின்னர், நிஷாந்த் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீதிபதி ராஜபிரபு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின்போது பொலிஸார் தன்னைத் துன்புறுத்தவில்லை என அவர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரை டிசம்பர் 4ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, மதுரை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
கடன் சுமையே கொள்ளைக்குக் காரணம் – நிஷாந்த் வாக்குமூலம்
பொலிஸ் விசாரணையின்போது நிஷாந்த் வழங்கியதாகக் கூறப்படும் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர், யூடியூப் சேனல்களுக்காக ரீல்ஸ் காணொளிகளைப் படம்பிடித்து அவற்றை எடிட்டிங் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாகவும், தன்னுடன் படித்த மீனாட்சி மூலம் அவரது குடும்பத்தினருடன் நெருக்கம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் காணொளிகளை வெளியிடுவதற்காகத் தனது தந்தையிடம் கடன் வாங்கி விலையுயர்ந்த கைப்பேசி மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கியதாகவும், இதனால் தனது தந்தைக்கு சுமார் 30 இலட்சம் ரூபாய் கடன் சுமை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
தனது வருமானத்தால் அந்தக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், தந்தை ஆட்டோ ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானமும் போதுமானதாக இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மீனாட்சியின் குடும்பத்தினருக்கும் வீடு கட்டுவதற்குப் பணம் தேவைப்பட்டதாகவும், இந்த நிதி நெருக்கடியே நகைக் கொள்ளையில் ஈடுபடத் தூண்டியதாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதல் முயற்சியில் தோல்வியடைந்தது ஏன்?
தனது வீட்டுக்குச் செல்லும் வழியில் தனிஷ்க் நகைக் கடை அமைந்திருந்ததால், அந்தக் கடையைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாக நிஷாந்த் தெரிவித்துள்ளார்.
இதற்காக நகை வாங்குவது போன்று பலமுறை கடைக்குச் சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் நகைகள் தொடர்பில் விசாரித்ததுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவதானித்துள்ளார்.
கடையில் கட்டுமானப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரத்தின் ஊடாக உள்ளே நுழையத் திட்டமிட்ட அவர், முதல் முயற்சியின்போது மின்தூக்கியைத் திறக்க முடியாமல் திரும்பியுள்ளார்.
இதையடுத்து, மின்தூக்கியை எவ்வாறு இயக்குவது என்பது தொடர்பான தொழில்நுட்பங்களை யூடியூப் மூலம் கற்றுக்கொண்டு, இரண்டாவது முறை கடைக்குள் நுழைந்து நகைகளைக் கொள்ளையடித்ததாகக் கூறியுள்ளார்.
கொள்ளை தொடர்பான தகவலைத் தனது தந்தைக்கும் தோழி மீனாட்சிக்கும் தெரிவித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் சேலத்துக்குத் தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக மூன்று மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
13 பகுதிகளாகப் பிரித்து நகைகளைப் புதைத்தேன்
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை எவ்வாறு மறைத்து வைத்தார் என்பது தொடர்பிலும் நிஷாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொள்ளையடித்த நகைகளுடன் திருப்பரங்குன்றம் பகுதிக்குச் சென்ற அவர், அதிகாலை 4 மணியளவில் தனது தந்தையைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, விபத்தில் சிக்கியுள்ளதாகக் கூறி அங்கு வரவழைத்துள்ளார்.
பின்னர், நகைகள் அடங்கிய ஒரு பையைத் தந்தையிடம் கொடுத்து வீட்டில் பாதுகாப்பாக வைக்குமாறு கூறியுள்ளார்.
அதன் பின்னர் நாகமலை புதுக்கோட்டை வரை சென்று, தான் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளைப் பழுதாக்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
நவம்பர் 12ஆம் திகதி காலை 9 மணியளவில் வீட்டுக்குச் சென்று தந்தையிடம் கொடுத்திருந்த நகைப் பையை மீண்டும் பெற்றுள்ளார்.
அந்த நகைகளை 13 பகுதிகளாகப் பிரித்து, தனித்தனியாகத் துணிகளில் சுற்றி இரண்டு பைகளில் வைத்துள்ளார். பின்னர், ஆட்டோவில் மாடக்குளம் மலையடிவாரத்துக்குச் சென்று அவற்றைப் புதைத்து வைத்துள்ளார்.
இதன்போது, நகைகளைச் சுற்றியிருந்த துணிகளை எரித்ததைச் சிலர் பார்த்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தந்தையையும் மீனாட்சியையும் விட்டுவிடுங்கள்”
கொள்ளைக்குப் பின்னர் பல்வேறு இடங்களுக்குச் சென்ற நிஷாந்த், பெங்களூருக்குச் சென்று அங்கிருந்து சேலத்துக்குச் சென்றதாகக் கூறியுள்ளார்.
சேலத்தில் நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டதாகவும், அவ்வாறு சரணடைந்திருந்தால் பொலிஸாருக்குத் தெரியாமல் குறைந்தபட்சம் ஒரு பை நகைகளையாவது தன்னிடம் வைத்திருக்க முடியும் என நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், பேருந்து சாரதி ஒருவரின் மூலம் பொலிஸாரிடம் சிக்கிக்கொண்டதாகக் கூறியுள்ளார்.
மேலும், இவ்வளவு நகைகளைக் கொள்ளையடித்த போதிலும், ஒரு கிராம் நகைகூட தனக்குக் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பான தகவலைத் தானே தனது தந்தைக்கும் மீனாட்சிக்கும் தெரிவித்ததாகவும், அவர்களுக்கு இந்தக் கொள்ளையில் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
“தயவுசெய்து எனது தந்தையையும் மீனாட்சியையும் விட்டுவிடுங்கள்” எனப் பொலிஸாரிடம் பலமுறை கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிஷாந்தின் தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையானவையா என்பது தொடர்பிலும் பொலிஸார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.