கரையை கடந்த அக்வான் புயலால் பெரும் பாதிப்பு இல்லை – ஒடிசா அமைச்சர்
ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் அருகே கரையைக் கடந்த அக்வான் புயலால் பெரிய அளவிலான சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த அக்வான் புயல், இன்று (20) காலை ஒடிசாவின் கோபால்பூர் அருகே கரையைக் கடந்தது.
இதனைத் தொடர்ந்து புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கிலோமீற்றர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது.
இது ஒடிசா வழியாக வடக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த மூன்று மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து ஆறு மணி நேரத்திற்குள் குறிப்பிடத்தக்க குறைந்த காற்றழுத்தப் பகுதியாகவும் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவிக்கையில், அக்வான் புயல் தொடர்ந்து வலுவிழந்து வருவதாகவும், நவம்பர் 21ஆம் திகதி காலை அளவில் குறிப்பிடத்தக்க குறைந்த காற்றழுத்தப் பகுதியாக மாறக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் வடக்கு ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மிக அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மழையின் தீவிரம் படிப்படியாகக் குறையக்கூடும் என்றாலும், மத்திய மற்றும் வடக்கு ஒடிசாவின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அக்வான் புயலின் தாக்கத்தால் ஒடிசாவில் பலத்த மழை பெய்துள்ள போதிலும், பெரிய அளவிலான சொத்துச் சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை என மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.