இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் சாதனை அளவில் அதிகரிப்பு – நவம்பரில் 9.53 பில்லியன் டொலர் முதலீடு
இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நவம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9.53 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளனர்.
இது இந்தியப் பங்குச் சந்தையில் ஒரே மாதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிகூடிய வெளிநாட்டு முதலீடாகப் பதிவாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைவடைந்தமை, நிறுவனங்களின் வருமானம் எதிர்பார்த்த அளவில் நிலைத்திருத்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பங்குகளில் இருந்து உலகளாவிய முதலீட்டாளர்கள் விலகி வருதல் உள்ளிட்ட காரணங்களால் இந்தியப் பங்குச் சந்தை மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தைக் குறியீடுகளான நிஃப்டி 50 (Nifty 50) இந்த மாதத்தில் இதுவரை 9.7 சதவீதமும், சென்செக்ஸ் (Sensex) 10.3 சதவீதமும் உயர்ந்துள்ளன.
இதன் மூலம், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிலான சிறந்த மாதாந்த வளர்ச்சியைப் பதிவு செய்யும் நிலைக்கு இந்தியப் பங்குச் சந்தை முன்னேறியுள்ளது.
தேசிய பத்திரங்கள் வைப்புத்தொகை அமைப்பின் (NSDL) தரவுகளின்படி, நவம்பர் மாதம் திங்கட்கிழமை வரையான காலப்பகுதியில் இந்தியப் பங்குகள் மற்றும் உள்நாட்டுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மொத்தமாக 10.33 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளனர்.
முன்னதாக, அதிக நிறுவனப் பங்கு மதிப்பீடுகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீட்டு வாய்ப்புகள் குறைவு மற்றும் உயர்வடைந்த எண்ணெய் விலைகள் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து பெருமளவில் முதலீடுகளை மீளப்பெற்றிருந்தனர்.
கடந்த 2025ஆம் ஆண்டில் 18.91 பில்லியன் டொலர் பெறுமதியான இந்தியப் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை செய்திருந்தனர். இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியிலும் 31.41 பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
எனினும், நவம்பர் மாதத்தில் ஏற்பட்டுள்ள சாதனை அளவிலான முதலீடுகளால், இந்த ஆண்டில் இதுவரை பதிவான நிகர வெளிநாட்டு முதலீட்டு வெளியேற்றம் 21.88 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.
இந்தியப் பங்குச் சந்தை ஆசியாவின் ஏனைய சந்தைகளுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியிருந்த நிலையை ஓரளவு சீர்செய்துள்ள போதிலும், நிஃப்டி 50 குறியீடு இந்த ஆண்டில் இதுவரை 3.2 சதவீத சரிவையே பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில், சிட்டி (Citi), எச்எஸ்பிசி (HSBC), கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தை தொடர்பில் சாதகமான கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
தென் கொரியா மற்றும் தாய்வான் போன்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த பங்குகள் அதிகமுள்ள சந்தைகளிலிருந்து முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மாற்றி வருவதாகவும், இந்தியா முதலீடுகளைப் பல்வகைப்படுத்துவதற்கான வாய்ப்பையும் ஒப்பீட்டளவில் குறைந்த ஏற்ற இறக்கத்தையும் வழங்குவதாகவும் எச்எஸ்பிசி ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இந்தியப் பங்குகளின் உயர்ந்த மதிப்பீடுகளை நியாயப்படுத்துவதற்கு நிறுவனங்களின் வருமானம் தொடர்ச்சியாக வளர்ச்சியடைவது அவசியம் என ஸ்டேட் ஸ்ட்ரீட் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மூத்த மூலோபாய நிபுணர் ஏஞ்சலா லான் தெரிவித்துள்ளார்.
நிதித்துறைப் பங்குகள் முன்னிலை
நவம்பர் மாதத்தில் இந்தியப் பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு நிதித்துறைப் பங்குகள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.
நிதிச் சேவைகள், வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் அரச வங்கிகளின் பங்குகள் 11.5 முதல் 13.5 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளன.
நிஃப்டி 50 குறியீட்டில் அதிக பங்கு வகிப்பைக் கொண்ட எச்டிஎஃப்சி வங்கியின் (HDFC Bank) பங்குகள் 17.9 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், ஐசிஐசிஐ வங்கியின் (ICICI Bank) பங்குகள் 13.4 சதவீதம் அதிகரித்துள்ளன.
காலாண்டு நிதி அறிக்கைகளில் வெளியான சாதகமான முடிவுகள், கடன் வழங்கல் வளர்ச்சி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் வட்டி வரம்பு மீதான அழுத்தம் குறைவடையும் என்ற கணிப்புகள் ஆகியவை வங்கிப் பங்குகளின் வளர்ச்சிக்கு வலுச்சேர்த்துள்ளன.
அதேவேளை, வாகன உற்பத்தித் துறையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மாதத்தில் வாகனத் துறைப் பங்குகளின் குறியீடு 8.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
மஹிந்திரா அன்ட் மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனத்தின் பங்குகள் 17.6 சதவீதம் அதிகரித்துள்ளன. அந்நிறுவனத்தின் காலாண்டு இலாபம் எதிர்பார்ப்புகளை விட அதிகமாகப் பதிவானதுடன், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்களுக்கான (SUV) கேள்வி தொடர்ந்து வலுவாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.