பிரேக் செயலிழந்த நிலையில் 463 கி.மீ. பயணித்த வந்தே பாரத் ரயில் – உயர் மட்ட விசாரணை ஆரம்பம்!
பிரேக் கட்டமைப்பு செயலிழந்த நிலையில், இந்தியாவின் வந்தே பாரத் ரயில் ஒன்று சுமார் 463 கிலோமீற்றர் தூரம் இயக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் தென்கிழக்கு ரயில்வே நிர்வாகம் உயர் மட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி, ஜார்கண்ட் மாநிலத்தின் ஹதியா ரயில் நிலையத்திலிருந்து உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி பகுதிக்கு வந்தே பாரத் ரயில் ஒன்றைக் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. பயணிகள் இல்லாத அந்த ரயிலை, சரக்கு ரயிலின் எஞ்சின் மூலம் இழுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதன்போது, சரக்கு ரயிலின் எஞ்சின் சாரதி, வந்தே பாரத் ரயிலின் பிரேக் கட்டமைப்பை ஆரம்பத்தில் பரிசோதித்துள்ளார். இதன்போது பிரேக் செயலிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அங்கிருந்த ரயில்வே அதிகாரிகளுக்கு சாரதி அறிவித்த போதிலும், பிரேக் கட்டமைப்பு முறையாகச் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ரயிலை எடுத்துச் செல்லுமாறு சாரதிக்கு உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, பிரேக் செயலிழந்த நிலையிலேயே சுமார் 463 கிலோமீற்றர் தூரம் ரயில் இயக்கப்பட்டுள்ளது. எனினும், உத்தரப் பிரதேசத்தின் சந்தௌலி பகுதியில் ரயிலை நிறுத்திய சாரதி, அதற்கு மேல் ரயிலை இயக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் ரயில்வேயின் மூத்த அதிகாரிகளுக்கு எழுத்துமூல முறைப்பாட்டையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தென்கிழக்கு ரயில்வே நிர்வாகம் தற்போது உயர் மட்ட விசாரணையை முன்னெடுத்து வருகிறது. தவறிழைத்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.