மணிப்பூரில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழப்பு; 180-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவின் மணிப்பூர் மாநிலம் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் கடந்த 48 மணிநேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 180-க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தங்களது வீடுகளிலும், மேலும் சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த சந்தேல் மாவட்டக் காவல்துறையினர், உயிரிழந்தவர்கள் அருந்திய மதுபானம் சந்தேல் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டதல்ல என்றும், அண்டை மாவட்டமான காக்சிங்கில் உள்ள சுக்னு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும், உயிரிழப்புகளுக்கான துல்லியமான காரணம் மருத்துவ ரீதியாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என சந்தேல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மறு அறிவித்தல் வரும் வரை உள்ளூரில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான மதுபானங்களை அருந்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மது அருந்திய பின்னர் வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, தலைசுற்றல், பார்வை மங்குதல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் சந்தேகத்திற்குரிய மதுபானத்தை அருந்தியவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணிப்பூர் முதலமைச்சர் யும்னாம் கெம்சந்த் சிங் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான மருத்துவ உதவிகளை மாநில அரசு வழங்கும் என உறுதியளித்துள்ள அவர், சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி, இதற்குப் பொறுப்பானவர்களை விரைவாகக் கைது செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சந்தேல் மாவட்டத்தில் மருத்துவக் குழுக்களும் அத்தியாவசிய மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.