தோனி தமிழகத்துக்கு கிரிக்கெட்டைத் தாண்டிய பிணைப்பை வழங்கியவர் – மு.க.ஸ்டாலின்
தமிழகத்தின் தத்துப்பிள்ளையாகக் கொண்டாடப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி, சென்னைக்கு வெறும் கோப்பைகளை மட்டுமன்றி, கிரிக்கெட்டையும் தாண்டிய உணர்வுபூர்வமான பிணைப்பையும் வழங்கியுள்ளார் என திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தோனி பல தலைமுறைகளை ஒன்றிணைக்கும் ஓர் உணர்வாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நல்ல விஷயங்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர வேண்டியவை என்றாலும், தமிழகத்தின் தத்துப்பிள்ளையான தோனிக்கு அவர் உண்மையிலேயே தகுதியான பிரியாவிடையை வழங்க இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கலாம் எனத் தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தோனி வழங்கிய எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்கள், அற்புதமான வெற்றிகள் மற்றும் என்றும் நிலைத்திருக்கும் நினைவுகளுக்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கும் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் வீரராகத் தொடர்ந்து விளையாடும் பயணத்திலிருந்து தோனி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக அவர் செயல்படவுள்ளதாகவும் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகர் பொறுப்பை ஏற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பதிவில், அணியின் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே எண்ணற்ற வெற்றிகள், சவாலான காலகட்டங்கள் மற்றும் மறக்க முடியாத நினைவுகள் என அனைத்திலும் தோனி முக்கியப் பங்காற்றியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதுடன், அடுத்த தலைமுறை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் அவர் திகழ்ந்துள்ளதாகவும், 'தல' தோனி எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளத்தின் ஓர் அங்கமாக இருப்பார் என்றும் அந்த அணி தெரிவித்துள்ளது.
சென்னை எப்போதும் தோனியின் இல்லமாகவே இருக்கும் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது.