மாத்தறையில் முதலாவது தேசிய சதொச மொத்த விற்பனை நிலையம் திறப்பு!
கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் (CWE) மறுபெயரிடப்பட்ட நிறுவனமான தேசிய சதொசவின் முதலாவது மொத்த விற்பனை நிலையம் இன்று (11) மாத்தறையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான மொத்த விற்பனை நிறுவனத்தை மீண்டும் வலுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இது முக்கியமானதொரு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் தகவலின்படி, மாத்தறை ராகுல மாவத்தையில் இலக்கம் 31 என்ற முகவரியில் இந்த விற்பனை நிலையம் அமைந்துள்ளது.
உள்ளூர் விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதிப்படுத்துவதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான மொத்த விலைகளில் மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.
இதன் ஊடாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயம், தானிய வகைகள் மற்றும் அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை மொத்தமாக விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக கலைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டு செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
தலைவர் கொசல வில்பாவ மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க பெர்னாண்டோ உள்ளிட்ட இரண்டு பணியாளர்களுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது 50 பணியாளர்களைக் கொண்டதாக விரிவடைந்துள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டு முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையுடன் இணைந்து நெல் கொள்வனவு செய்து, அவற்றை அரிசியாக மாற்றி 'தேசிய சதொச அரிசி' என்ற வர்த்தக நாமத்தின் கீழ் விநியோகித்து வருகிறது. அத்துடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளையும் கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளது.
திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, அரச சொத்துக்களை மீட்டெடுத்து அரச நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இந்த நிறுவனத்தின் மீளெழுச்சி வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சுமார் 60 வாகனங்கள் அவற்றின் மதிப்பீட்டுத் தொகையை விடக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், மேலும் பல சொத்துக்கள் உரிமை தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், சதொச தலைமை அலுவலகத்திற்கு அருகிலுள்ள சுமார் 2 பில்லியன் ரூபா பெறுமதியான கட்டடம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாகக் கைச்சாத்திடப்படாமல் இருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், நிறுவனத்தின் சொத்துக்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும், தேசிய சதொச என்ற புதிய வர்த்தக நாமத்தின் கீழ் நிறுவனத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கருத்துத் தெரிவிக்கையில், தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள மொத்த விற்பனை நிலையம் முன்னர் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், நுளம்புகள் பெருகும் இடமாக மாறியிருந்ததாகவும் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் பற்றைகள் நிறைந்து காணப்பட்ட இந்த இடம், தற்போது முழு தென் மாகாணத்துக்கும் பயனளிக்கக்கூடிய மொத்த விற்பனை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த வளாகத்தைப் புனரமைத்து மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் தெரிவித்தார்.