போருக்குத் தங்குதடையற்ற விநியோகம், உணவுக்குத் தடை: ஐ.நா.வில் நேபாளப் பிரதமர் சாடல்!
“உலக நாடுகள் போர்க் கருவிகளையும் தளவாடங்களையும் எல்லைகளைத் தாண்டி உடனுக்குடன் அனுப்ப முடிகின்ற போதிலும், மனித குலத்திற்குத் தேவையான உரம் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதில் பாரிய தடைகளை எதிர்நோக்குகின்றன” என நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா சர்வதேச அமைப்பைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் (UN) 81ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில்:
"ஆயுதங்களும் துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் எல்லைகளை இலகுவாகக் கடந்து குறித்த நேரத்திற்குச் சென்று சேர்கின்றன. ஆனால், நேபாளத்திலுள்ள ஒரு விவசாயிக்குத் தேவையான நேரத்தில் உரத்தையோ அல்லது எரிபொருளையோ பெற்றுக்கொள்வது பெரும் போராட்டமாக உள்ளது. நாம் போருக்குத் தங்குதடையற்ற விநியோகக் கட்டமைப்பையும் , உணவுக்கு முடங்கிப்போன விநியோகக் கட்டமைப்பையுமே கட்டியெழுப்பியுள்ளோம்."
இந்த நெருக்கடி நேபாளத்திற்கு மட்டும் உரியது அல்ல எனக் குறிப்பிட்ட அவர், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளும் இவ்வாறான அழுத்தங்களையே எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டினார்.
சிறப்பாக இலங்கையைக் குறிப்பிட்டு உரையாற்றிய அவர், "நாம் வெப்பமடையச் செய்யாத காலநிலையினாலும், நாம் தொடங்காத போர்களினாலும் பிராந்திய நாடுகள் மீளமீளப் பாதிக்கப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் , உலகளாவிய விநியோகச் சங்கிலிச் சீர்குலைவு மற்றும் ஏற்றத்தாழ்வுகள் குறித்துக் கவலை வெளியிட்ட நேபாளப் பிரதமர், குறைந்த வளங்களைக் கொண்ட ஏழை நாடுகள், தம்மைப் பாதிக்காத உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தகுதியற்ற முறையில் விலைகொடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வேளையில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்குத் தேவையான நிதியுதவிகள் மற்றும் ஆதரவுகள் விரைவாகக் கிடைப்பதை உறுதிசெய்யக் கூடிய வகையில் வலுவான சர்வதேச ஒத்துழைப்பு அவசியமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.