இந்தோனேசியாவில் கவிழ்ந்த படகில் இருந்து 3 சடலங்கள் மீட்பு: மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தல்
இந்தோனேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளான பயணிகள் படகில் இருந்து மேலும் மூன்று சடலங்களை ஆழ்கடல் மூழ்காளர்கள் வெள்ளிக்கிழமை மீட்டுள்ளனர். இதன் மூலம் இந்த கொடூர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் 126 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஜாவாவின் சுராபாயாவிலிருந்து தென் கலிமந்தானில் உள்ள பஞ்சார்மாசின் நோக்கி 243 பேருடன் பயணித்த 'விர்கோ டிரான்ஸ்போர்ட் 8' (Virgo Transport 8) என்ற கலம், சுமார் 3 மீற்றர் (10 அடி) உயரத்திற்கு எழும்பிய கொந்தளிப்பான அலைகளில் சிக்கிச் சாய்ந்ததாக அதன் மாலுமி ஆபத்துச் செய்தி அனுப்பியிருந்தார். ஜாவா கடலின் மசலெம்போ நீர்நிலைப் பகுதியில், பஞ்சார்மாசினில் இருந்து சுமார் 148 கிலோமீற்றர் தொலைவில் இக்கலம் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நீடித்த சீரற்ற வானிலை மற்றும் பலத்த கடல் நீரோட்டம் காரணமாகத் தாமதமான மீட்புப் பணிகள், வெள்ளிக்கிழமை வானிலை சீரடைந்ததையடுத்து தீவிரப்படுத்தப்பட்டன. இந்தோனேசிய கடற்படையின் சிறப்புப் படைப் பிரிவினர் மற்றும் 17 மூழ்காளர்கள் அடங்கிய குழுவினர், கவிழ்ந்த கலத்தின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்களை மீட்டுள்ளனர்.
இக்கலத்தில் 213 பயணிகளும் 30 பணியாளர்களும் பயணித்ததாக உத்தியோகபூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுவரை 108 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 119 மீற்றர் நீளமுடைய இக்கலம் ஜப்பானில் 1987-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.
தற்போது இக்கலம் கடலின் அடியில் சுமார் 29 மீற்றர் ஆழத்தில் தலைகீழாக மூழ்கிக் கிடப்பதாகவும், அதன் பின்பகுதி கடலடித் தரையில் புதைந்துள்ளதாகவும் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகவரகம் தெரிவித்துள்ளது. கலத்தை முழுமையாக மீட்கும் பணிகள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக கலத்திலிருந்து எரிபொருள் கசிவு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகுப் போக்குவரத்துப் பிரதானமாக உள்ளபோதிலும், போதிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாததால் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.