கனடாவில் விமான விபத்து: தமிழ்நாட்டு மாணவர்கள் இருவர் பலி
கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரு இந்திய மாணவர்கள், அவர்கள் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் சஸ்காட்சுவான் பகுதியில் கடந்த 18-ஆம் திகதி அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரெஜினாவில் இருந்து கார்லைல் வழியாக ஸ்டெய்ன்பாக், மனிடோபா வரை மேற்கொள்ளப்பட்ட இரவு நேரப் பயிற்சியின் போதே இவர்கள் பயணித்த சிறிய ரக விமானம் திடீரென விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் விமானத்தில் பயணித்த இரு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரன் திருஞானசம்பந்தம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கனடாவுக்கான இந்தியத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், "இந்தத் துயரமான சூழ்நிலையில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்க உறுதியேற்கிறோம். உயிரிழந்த மாணவர்களின் உடல்களை உடனடியாக இந்தியாவுக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விபத்துக்கான காரணம் குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்புச் சபை தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.