AI பயிற்சிக்காக தரவுகளைத் திரட்டும் தானியங்கி பொட்கள் – பல்கலைக்கழக நூலகங்களின் சேவைகள் பாதிப்பு
செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்காகத் தரவுகளைத் திரட்டும் தானியங்கி பொட்களின் (Bots) அதிகப்படியான இணையச் செயல்பாடுகளால் பல்கலைக்கழக நூலகங்களின் இணையத்தளச் சேவைகள் பாதிக்கப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ChatGPT, Claude மற்றும் Gemini போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்காகப் பல்கலைக்கழக நூலக இணையத்தளங்களில் உள்ள தகவல்கள் தானியங்கி முறையில் பெருமளவில் திரட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோ தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் இணைப் பேராசிரியரும், நம்பகமான செயற்கை நுண்ணறிவுக்கான கனடா ஆராய்ச்சித் தலைவருமான பீட்டர் லூயிஸ், CTV தொலைக்காட்சியின் 'Your Morning' நிகழ்ச்சியில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பொதுவான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதற்கு அதிகளவிலான உயர்தரத் தகவல்கள் அவசியமாக இருப்பதாகவும், குறிப்பிட்ட துறைகள் மற்றும் நுணுக்கமான தலைப்புகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கும் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக நூலக இணையத்தளங்களில் தானியங்கி தேடல்கள் மற்றும் வினவல்கள் மூலம் மிகப்பெரிய அளவில் தகவல்கள் திரட்டப்படுகின்றன. இதனால் சில சந்தர்ப்பங்களில் நூலகங்களின் இணையச் சேவைகள் செயலிழப்பதுடன், பொதுமக்களின் தகவல் அணுகலும் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு உதாரணமாக, 2025ஆம் ஆண்டு ஒரே நாளில் பின்லாந்து இசை தொடர்பாக 11,329 தேடல்கள் இடம்பெற்றதாக அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகம் – சேப்பல் ஹில் தெரிவித்துள்ளது.
இத்தகைய தானியங்கி தேடல்கள் கல்வி நிறுவனங்களின் செலவுகளை அதிகரிப்பதுடன், உண்மையான ஆய்வாளர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதிலும் சிரமங்களை ஏற்படுத்துகின்றன.
AI பொட்கள் சிக்கலான தேடல் வினவல்களை மேற்கொள்வதால், நூலகங்களின் சேவையகங்கள் மீது அதிக சுமை ஏற்படுவதாக பீட்டர் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இணையச் சேவையகங்கள் அதிக சுமைக்கு உள்ளாகி, 'Denial of Service Attack' எனப்படும் சேவை மறுப்பு தாக்குதலுக்கு ஒத்த நிலைமை உருவாகக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் சாதாரண பயனர்கள் இணையத்தளங்களை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொள்வதுடன், சில இணையத்தளங்கள் முற்றாகச் செயலிழக்கவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பல்கலைக்கழகத் தகவல் கட்டமைப்புகளைத் தானியங்கி AI முகவர்கள் அணுகுவதைத் தடுக்கும் நடவடிக்கையை கனடாவின் விக்டோரியா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்துள்ளது.
AI பயிற்சிக்காகத் தங்களது தகவல்கள் திரட்டப்படுவதை விரும்பாத நிறுவனங்களின் கோரிக்கைகளைச் சில AI நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இருப்பினும், தகவல்களைப் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் அதற்கான கட்டணத்தை கல்வி நிறுவனங்களுக்கு வழங்குவதும் ஒரு தீர்வாக அமையலாம் என லூயிஸ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தகவல்களை அணுகுவதற்கான தேடல்களின் எண்ணிக்கை, சேவையகங்கள் மீதான சுமை மற்றும் பயன்படுத்தப்படும் தகவல்களின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் AI நிறுவனங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் முறையான கட்டண ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது நீண்டகாலத் தீர்வாக அமையும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.