மைக்ரோசொஃப்ட் சேவைகளில் பரவலான முடக்கம் – Outlook, Teams உள்ளிட்ட சேவைகள் பாதிப்பு!
மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் பல்வேறு இணையச் சேவைகளில் வியாழக்கிழமை ஏற்பட்ட பரவலான தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Downdetector.com என்ற இணையச் சேவைகளின் செயல்பாட்டு நிலையை கண்காணிக்கும் தளத்தின் தகவலின்படி, மைக்ரோசொஃப்ட் 365, Outlook மற்றும் Teams உள்ளிட்ட சேவைகளில் இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சற்று முன்னதாக இந்தப் பாதிப்பு ஆரம்பமானதாகவும், அச்சமயத்தில் Outlook சேவையில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக சுமார் 130,000 பயனர்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, Amazon Web Services மற்றும் Google சேவைகளைப் பயன்படுத்தும் சிலரும் செயலிழப்பு தொடர்பான பிரச்சினைகளைப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்ட மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் பேச்சாளர், Microsoft 365 சேவைகளில், குறிப்பாக Exchange Online தொடர்பில் பயனர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தமது நிறுவனம் அறிந்துள்ளதாகவும், அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சேவைகளை விரைவில் வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், வாடிக்கையாளர்களின் பொறுமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சேவை முடக்கம் தொடர்பான தகவல்களை மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தனது Microsoft 365 Status என்ற சமூக ஊடகக் கணக்கின் ஊடாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
மறுபுறம், Amazon நிறுவனம் தனது சேவைகள் வழமைபோன்று இயங்கி வருவதாகவும், இணையத்தின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட தொடர்பற்ற இடையூறு காரணமாகத் தவறான செய்திகள் பரவி வருவதாகவும் X சமூக ஊடகத்தில் தெரிவித்தது.
சேவைகளின் உண்மையான நிலவரத்தை அறிந்துகொள்வதற்காகத் தனது சேவை நிலை கண்காணிப்புப் பக்கத்தைப் பார்வையிடுமாறும் Amazon பயனர்களைக் கேட்டுக்கொண்டது.
பிற்பகல் 4 மணியளவில், பாதிக்கப்பட்ட சில சேவையகங்களை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரக்கூடிய மாற்று சேவை நிலை சரிபார்ப்பு முறையை உறுதிப்படுத்தியுள்ளதாக மைக்ரோசொஃப்ட் அறிவித்தது.
இந்த மாற்றத்தை மேலும் பல சேவையகங்களுக்குப் பயன்படுத்தி வருவதாகவும், பதிலளிக்காத சேவையகங்களைத் தானாகக் கண்டறிந்து மீள ஆரம்பிக்கும் தானியங்கி மீட்பு கட்டமைப்புகளைத் தயாரித்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
ஆரம்பத்தில், பல்வேறு பிராந்தியங்களில் மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் உட்கட்டமைப்பில் ஏற்பட்ட அதிகப்படியான சுமையே இந்தத் தொடர்பாடல் பாதிப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பல சேவையகங்கள் எதிர்பாராத விதமாகச் செயலிழந்ததால், எஞ்சிய சேவையகங்கள் மீது அதிக சுமை ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது.
அத்துடன், சில சேவையகங்கள் தானியங்கி செயல்நிலைச் சோதனைகளிலும் தோல்வியடைந்துள்ளதாக மைக்ரோசொஃப்ட் சுட்டிக்காட்டியது.
மேலும், பாதிப்பு ஏனைய சேவையகங்களுக்கும் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், செயலிழந்த சேவையகங்களை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.