காதல் மோசடிக்காகத் திருடப்பட்ட புகைப்படம்; உண்மையான நபரைத் தேடி வந்த காதல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்!
அமெரிக்காவில் ஒருவரது புகைப்படங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான போலி சமூக வலைத்தளக் கணக்குகளை உருவாக்கி, காதல் மோசடியில் ஈடுபட்டுவரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடிகளால் பணத்தை இழந்தவர்கள், போலிக் கணக்குகளில் பயன்படுத்தப்பட்ட புகைப்படத்தின் உண்மையான உரிமையாளரைத் தேடிச் செல்லும் நிலையும் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் உள்ள டுபெலோ நகரைச் சேர்ந்த ஹண்டர் பிக்ஹாம் (Hunter Bigham) என்பவரே இவ்வாறு அடையாளத் திருட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, காதல் மோசடியில் ஈடுபடும் நபர்கள் ஹண்டரின் புகைப்படங்களைத் திருடி, பல்வேறு பெயர்களில் நூற்றுக்கணக்கான போலி சமூக வலைத்தளக் கணக்குகளை உருவாக்கி வருகின்றனர். இந்தக் கணக்குகள் மூலம் காதல் உறவை ஏற்படுத்திக்கொள்வது போன்று நடித்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் பலர், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னர், போலிக் கணக்குகளில் பயன்படுத்தப்பட்ட புகைப்படத்தின் உண்மையான உரிமையாளரான ஹண்டரைத் தேடி அவரைத் தொடர்புகொள்கின்றனர்.
இதுவரை தன்னைத் தொடர்புகொண்ட பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், சுமார் 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஹண்டர் கணக்கிட்டுள்ளார்.
சமீபத்தில் கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸ் பகுதியில் தனது கணவருடன் வீதியைக் கடப்பதற்காகக் காத்திருந்தபோது, பெண் ஒருவர் திடீரென அவரை நோக்கி ஓடி வந்து கூச்சலிட்டுள்ளார்.
தனது தோழி இணையத்தில் காதல் கொண்டிருந்த நபர் உண்மையானவர் அல்ல என்று பலமுறை எடுத்துக்கூறியதாகவும், ஆனால் தற்போது அந்த நபரின் புகைப்படத்தில் இருப்பவரையே நேரில் பார்ப்பதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் தோழியைத் தனக்குத் தெரியாது என்றும், தான் திருமணமான ஓரினச்சேர்க்கையாளர் என்றும் ஹண்டர் விளக்கியுள்ளார். மேலும், தானும் காதல் மோசடியில் பாதிக்கப்பட்ட ஒருவர் என்றும், தனது புகைப்படங்கள் மோசடிக்காரர்களால் அனுமதியின்றிப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹண்டரின் புகைப்படங்கள் பல்வேறு பெயர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வின்ஸ், ரொபேர்டோ மற்றும் குறிப்பாக ஹென்றி கிளார்க் (Henry Clerk) உள்ளிட்ட பெயர்களில் போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஹென்றி கிளார்க் அல்லது ஹென்றி கிளார்க் (Henry Clark) என்ற பெயரில் மட்டும் ஹண்டரின் புகைப்படத்தைப் பயன்படுத்திய 177 பேஸ்புக் கணக்குகளை அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கண்டறிந்துள்ளது.
மோசடிக்காரர்கள் தங்களை ஹூஸ்டனில் வசிக்கும் விதவை எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைப் புவியியலாளர் என்றும், ஸ்பெயினின் இரகசியப் புலனாய்வு அதிகாரி என்றும் பல்வேறு விதமாக அறிமுகப்படுத்தியுள்ளனர். பெரும்பாலும் எண்ணெய் அகழ்வு மேடைகளில் கடலில் பணியாற்றுபவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டு, தங்களை நம்பியவர்களிடம் பணம் பெற்றுள்ளனர்.
ஆனால், உண்மையான ஹண்டர் பிக்ஹாம் மூன்று பிள்ளைகளின் தந்தை. தனது கணவர் ஜொன்னி மற்றும் பிள்ளைகளுடன் டுபெலோ நகரில் வசித்து வருகிறார். எண்ணெய் அகழ்வு மேடைகளில் பணியாற்றும் அவர் அல்ல; தளபாட உற்பத்தி நிறுவனமொன்றில் விற்பனை நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். சமூக வலைத்தளங்களில் தனது குடும்பப் புகைப்படங்களைப் பகிர்வதுடன், வயது வந்தோருக்கான பொழுதுபோக்குத் துறையிலும் மேலதிகமாகச் செயல்பட்டு வருகிறார்.
ஒரு கட்டத்தில் நாளொன்றுக்கு 15 பேர் வரை தன்னைத் தொடர்புகொண்டதாக ஹண்டர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஸ்பெயின், வெனிசுலா, ஹொங்கொங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவரைத் தொடர்புகொண்டுள்ளனர். புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி மற்றும் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பலரும் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலர் தாங்கள் ஏமாற்றப்பட்டதற்குக் காரணம் ஹண்டர்தான் எனத் தவறாக நம்பி, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். ஒருவர் அவரைத் திட்டியதுடன், அவரது வீட்டு முகவரி தனக்குத் தெரியும் என்றும், அவரது மகனின் எதிர்காலத்தைச் சீரழிப்பதாகவும் மிரட்டியுள்ளார்.
போலிக் கணக்குகளை நீக்குமாறு சமூக வலைத்தள நிறுவனங்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தபோதும், பெரும்பாலான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ.யிடம் முறைப்பாடு செய்தும் இதுவரை குறிப்பிடத்தக்க தீர்வு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தனது உண்மையான அடையாளத்தை ஏற்றுக்கொள்வதற்காக நீண்டகாலம் போராடியதாகக் கூறும் ஹண்டர், தற்போது தனது புகைப்படங்களும் அடையாளமும் மோசடிக்காரர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
தனது இணையச் செயல்பாடுகளைக் குறைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களிலிருந்து விலகினால் மட்டுமே இந்தப் பிரச்சினையைத் தடுக்க முடியும் என்ற ஆலோசனையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கண்ணீர் மல்கக் கருத்துத் தெரிவித்த அவர், தனது உண்மையான அடையாளத்தை ஏற்றுக்கொள்வதற்காகப் பெரும் போராட்டத்தைச் சந்தித்ததாகவும், மீண்டும் அந்த நிலைக்குத் திரும்பத் தன்னால் முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம், இணையக் காதல் மோசடிகளால் பணத்தை இழப்பவர்களுக்கு மட்டுமன்றி, அவர்களுக்குத் தெரியாமலேயே புகைப்படங்கள் பயன்படுத்தப்படும் அப்பாவி நபர்களுக்கும் எவ்வளவு பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளது.