தினசரி வட்டி வழங்குவதாகக் கூறி 6.52 லட்சம் பேரிடம் ரூ.1,211 கோடி மோசடி!
தினசரி வட்டி வழங்குவதாகக் கூறி, இந்தியா முழுவதும் 6.52 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் சுமார் ரூ.1,211 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் மெக்சானா நகரைச் சேர்ந்த 40 வயதான தாவல் படேல் என்பவர், கடந்த 2024ஆம் ஆண்டு எஸ்டி பே (ST Pay), அப்னா பே (Apna Pay) ஆகிய இரண்டு செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்தச் செயலிகள் மூலம் முதலீடு செய்யப்படும் பணத்துக்கு தினசரி வட்டி வழங்கப்படும் என அவர் விளம்பரப்படுத்தியுள்ளார். இதனை நம்பி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 6.52 லட்சத்துக்கும் அதிகமானோர், ரூ.1,000 முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் குறித்த இரண்டு செயலிகளும் திடீரென செயலிழந்ததால், முதலீட்டாளர்களால் தங்களது பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர். குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் அம்ரேலி பொலிஸ் நிலையத்தில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அம்ரேலி பொலிஸாரால் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், குறித்த செயலிகள் மூலம் மொத்தம் ரூ.1,211 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த மோசடியால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக குஜராத் காணப்படுகிறது. அங்கு சுமார் 1.52 லட்சம் பேர் பணத்தை இழந்துள்ளனர். ராஜஸ்தானில் 1.36 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 74,000 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 45,000 பேரும், பிஹாரில் 31,000 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 30,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோசடியின் முக்கிய சூத்திரதாரியான தாவல் படேல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடைய மேலும் 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மோசடி செய்யப்பட்ட பணம் ஏழு போலி நிறுவனங்களுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசேட பொலிஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.