முல்லைத்தீவில் நவீன தபால் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய தபால் அலுவலகக் கட்டிடம், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று காலை உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
28 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நவீன தபால் அலுவலகத்தின் ஊடாக, மாவட்டத்தில் உள்ள 12,231 குடும்பங்களுக்கும், பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் மிகவும் திறம்பட தபால் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் தர (Grade I) தபால் அலுவலகமாகச் தொழிற்படவுள்ள இதன் மூலம் 5,830 குடும்பங்கள் நேரடியாகச் சேவைகளைப் பெறவுள்ளதுடன், இதன் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஆறு உப தபால் அலுவலகங்கள் ஊடாக மேலும் 4,883 குடும்பங்கள் பயனடைவர். இதுதவிர, 68 அரச நிறுவனங்கள், ஒன்பது விடுதிகள் (Hotels) மற்றும் நான்கு தொழிற்சாலைகளும் இச்சேவையின் மூலம் பயன்பெறவுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கப்பட்ட இந்நிர்மாணப் பணிகளைக் கட்டிடத் திணைக்களம் பொறுப்பேற்று நிறைவுசெய்துள்ளது.
கடந்த தசாப்த காலத்தில் முதன்முறையாக தபால் திணைக்களக் கட்டிடங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 600 மில்லியன் ரூபா நிதியின் கீழ் திறக்கப்பட்டுள்ள 12ஆவது புதிய தபால் அலுவலகம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தாம் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவெனக் குறிப்பிட்டதுடன், நாட்டின் அரச பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கும், அரச சேவைகளின் திறனை அதிகரித்து, அதன் வருமானத்தை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மீண்டும் முதலீடு செய்வதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது எனத் தெரிவித்தார். மேலும், முல்லைத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அண்மைக்காலத்தில் 2,500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலத்தில் நிலவிய முறைமையற்ற நிர்வாகச் சீர்கேடுகளும் ஊழல்களுமே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முதன்மைக்காரணம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்தி வருகின்றது என்றார். சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள் மற்றும் வீடமைப்பு ஆகிய அமைச்சுகள் ஒருங்கிணைந்து மாவட்ட மட்டத்திலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், நாட்டில் இனவாதம் அல்லது தீவிரவாதத்தைப் பரப்ப முயல்வோருக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
தபால் சேவையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் 2026ஆம் ஆண்டில் புதிய கட்டிடங்களுக்காக 400 மில்லியன் ரூபாவும், புனரமைப்புப் பணிகளுக்காக 600 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்து வாகனங்கள், மூடிய சுற்றுத் தொலைக்காட்சி (CCTV) கேமரா அமைப்புகள், மேசைக்கணினிகள் மற்றும் நவீன கைக்கணினிகள் கொள்வனவு செய்வதற்கும் பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.