பசில் ராஜபக்ஷவை கைது செய்ய இன்டர்போல் உதவி நாடல்
முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக நீல அறிவித்தல் ஒன்றை விடுக்குமாறு இலங்கை பொலிஸார், சர்வதேச பொலிஸ் அமைப்பிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது இலங்கையில் இல்லாத பசில் ராஜபக்ஷ தொடர்பில் தகவல்களைத் திரட்டும் நோக்கிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸாரின் இக்கோரிக்கையைத் தொடர்ந்து, மேலதிக தகவல்களை வழங்குமாறு சர்வதேச பொலிஸ் அமைப்பு கேட்டுள்ளதாகவும், அதற்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகளில் இலங்கை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தற்போது நீதிமன்றத்தினால் இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்குகளின் பின்னணி:
மாத்தறை காணி விவகாரம்: மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட நிதியைப் பயன்படுத்தி 1.5 ஏக்கர் காணியைக் கொள்வனவு செய்தமை தொடர்பான குற்றச்சாட்டு.
சுற்றுலாப் பணியக நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை: ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி 12,000 ரீ-ஷர்ட்டுகளை விநியோகித்தமை தொடர்பான குற்றச்சாட்டு.
இவ்விரு வழக்குகள் தொடர்பிலேயே அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் உதவியை இலங்கை அதிகாரிகள் நாடியுள்ளனர்.