சமூக ஊடகப் பிரச்சாரங்கள் குறித்து எச்சரிக்கை!: நுகர்வோர் அதிகாரசபை
மருத்துவப் பரிசோதனை கட்டணங்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை முக்கிய விளக்கம்! சமூக ஊடகப் பிரச்சாரங்கள் குறித்து எச்சரிக்கை!
சமூக ஊடகங்களில் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணப் பட்டியல் என்ற பெயரில் பரப்பப்பட்டு வரும் விளம்பரம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெளிவுபடுத்தலொன்றை வெளியிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் குறித்த அறிவித்தல் அதிகாரப்பூர்வமானது அல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள அதிகாரசபை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக் கட்டணங்களும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் எனக் பொதுமக்கள் கருதி ஏமாறவேண்டாம் என எச்சரித்துள்ளது.
அதிகாரசபையின் உத்தியோகபூர்வ வர்த்தமானி உத்தரவுகளின் பிரகாரம், பின்வரும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு மட்டுமே அதிகபட்சக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது:
முழுமையான குருதிப் பரிசோதனை: ஒரு பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு அதிகபட்சமாக 400 ரூபாய் (வர்த்தமானி உத்தரவு இலக்கம் 67, 2186/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி, 2020 ஜூலை 29).
டெங்கு என்.எஸ்.1 அன்டிஜன் பரிசோதனை : ஒரு பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு அதிகபட்சமாக 1,200 ரூபாய் (மேற்படி வர்த்தமானி உத்தரவு).
கோவிட்-19 பி.சி.ஆர். பரிசோதனை : ஒரு பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு அதிகபட்சமாக 6,500 ரூபாய் (வர்த்தமானி உத்தரவு இலக்கம் 75, 2240/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி, 2021 ஆகஸ்ட் 12).
கோவிட்-19 விரைவு அன்டிஜன் பரிசோதனை : ஒரு பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் (மேற்படி வர்த்தமானி உத்தரவு).
அதேவேளை, சமூக வலைத்தளங்களில் உலா வரும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய மருத்துவப் பரிசோதனைகளான FBS, RBS, HbA1C, குருதி கொழுப்புப் பரிசோதனை (Lipid Profile), கல்லீரல் செயற்பாட்டுப் பரிசோதனை (LFT), சிறுநீரக செயற்பாட்டுப் பரிசோதனை (RFT), சிறுநீர்ப் பரிசோதனை (UFR), CRP, கணினி வரைவி வரைபடம் (CT), காந்த அதிர்வு வரைபடம் (MRI), அல்ட்ராசவுண்ட் (Ultrasound), மார்பகப் பரிசோதனை (Mammogram) மற்றும் எழும்பு அடர்த்திப் பரிசோதனை (DEXA) போன்றவற்றுக்கான கட்டணங்கள் அதிகாரசபையினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் அல்ல என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் உத்தியோகபூர்வ மூலங்களிலிருந்து வெளிவரும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது குறித்த மேலதிக தெளிவுபடுத்தல்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியும்.