டெலிகிராம் மூலம் இணையவழி நிதி மோசடி: படுவத்த பகுதியில் பெண் கைது!
டெலிகிராம் செயலி மூலமாக இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 38 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் படுவத்த பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் அடிப்படையில், சனிக்கிழமை காலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் குழுவொன்றின் மூலம் இணையவழி வியாபாரத் திட்டம் ஒன்றை விளம்பரப்படுத்தி, அதில் முதலீடு செய்வதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என மக்களை நம்பவைத்து நிதி திரட்டப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு திரட்டப்பட்ட மொத்தத் தொகையான 542,877 ரூபாயில், 66,999 ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த சட்டவிரோத மோசடி நடவடிக்கைக்கு உதவியாகவும் ஒத்தாசையாகவும் செயல்பட்ட குற்றச்சாட்டே குறித்த பெண் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.