தாய்லாந்து துணைப் பிரதமருக்கு உரிய மரியாதை இல்லையா? அரசிடம் ஐ.தே.க. கேள்வி
தாய்லாந்தின் துணைப் பிரதமர் சுபாஜீ சுதும்புன் (Suphajee Suthumpun), இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்தபோது அவருக்கு உரிய இராஜதந்திர வரவேற்பும் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், அரசாங்கம் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அக்கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
மிஹிந்தலையில் அமைந்துள்ள மிஹிந்து மகா சேயாவின் சூடாமணி திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த தாய்லாந்து துணைப் பிரதமருக்கு, உரிய இராஜதந்திர நடைமுறைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்படாதது ஏன் என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தச் சம்பவம், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் காணப்படும் குறைபாடுகளை வெளிப்படுத்துவதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
வெளிநாட்டுத் தலைவர்கள் உத்தியோகபூர்வ விஜயமாகவோ அல்லது தனிப்பட்ட விஜயமாகவோ இலங்கைக்கு வருகை தரும்போது, அவர்களுக்கு உரிய இராஜதந்திர மரியாதைகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வழங்குவது இலங்கையின் வழக்கமான நடைமுறை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கு உதாரணமாக, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், பதவியிலிருந்து விலகிய பின்னர் தனிப்பட்ட விஜயமாக இலங்கைக்கு வந்தபோது அவருக்குச் சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
தாய்லாந்து துணைப் பிரதமர் சுபாஜீ சுதும்புன், தனது உத்தியோகபூர்வ பதவியின் அடிப்படையில் குறித்த சமய நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தமையையும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் இராஜதந்திர மற்றும் பௌத்த மதத் தொடர்புகளை நினைவுபடுத்திய அக்கட்சி, மிஹிந்து மகா சேயாவின் சூடாமணி மற்றும் முகடு இரத்தினம் ஆகியவற்றைத் தாய்லாந்திலிருந்து கொண்டுவருவதற்கும் துணைப் பிரதமர் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்த தாய்லாந்து துணைப் பிரதமருக்கு உரிய இராஜதந்திர அங்கீகாரமும் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.