ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தத்திற்கு சபாநாயகர் சான்றளிப்பு!
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தச் சட்டமூலத்திற்கான சான்றிதழில் இன்று (19) கையொப்பமிட்டுள்ளார். இதன் மூலம் குறித்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இச்சட்டம் 2026ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க ஊழல் தடுப்புச் (திருத்த) சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் கடந்த 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதி முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இச்சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெற்றது. இதனையடுத்து, வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அடையாளம் காணப்பட்ட சட்டரீதியான, விளக்கமளித்தல் தொடர்பான, நிர்வாக மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இந்தத் திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும்.
அத்துடன், சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பதிப்புகளுக்கு இடையிலான முரண்பாடுகளைச் சரிசெய்வதுடன், ஊழல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடரும் நடவடிக்கைகளில் எதிர்கொள்ளப்படும் சவால்களைக் குறைப்பதும் இதன் நோக்கங்களாகும்.
மேலும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) நிர்வாகச் செயற்பாடுகளை மேம்படுத்துவதுடன், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிவிப்புகளை ஒருங்கிணைக்கப்பட்ட மின்னணு முறைமையின் ஊடாகச் சமர்ப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும் இந்தத் திருத்தங்கள் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சட்டத் திருத்தங்கள் இலங்கையில் ஊழலுக்கு எதிரான சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டங்களை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்தும் என நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.