கொழும்பு பேரே ஏரியைப் புனரமைக்கும் திட்டம்: 120-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பு
கொழும்பில் அமைந்துள்ள பேரே ஏரியைப் புனரமைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கையில் 120-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர்.
இலங்கைக்கான ஆசிய பசுபிக் அனர்த்த முகாமைத்துவக் கூட்டணி (A-PAD SL), தனது ‘தூய நீர்வழிகள் முன்முயற்சித் திட்டத்தின்’ முதல் நடவடிக்கையை இதற்காக ஆரம்பித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி கொழும்பு ஸ்ரீ உத்தரானந்த மாவத்தை படகுத்துறையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தன்னார்வலர்கள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பங்காளி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என 120-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பேரே ஏரி புனரமைப்புக்கான செயலணியின் முயற்சியின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, HSBC ஸ்ரீலங்கா மற்றும் Clean Ocean Force Sri Lanka ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஏரியைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களில் மாசுபாட்டுக்கு எதிரான விழிப்புணர்வுப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், ஏரியைச் சூழவுள்ள பகுதிகளில் கழிவுகள் குவிந்துள்ள இடங்கள் மற்றும் மாசடைந்த பகுதிகளை அடையாளம் காணும் வரைபடமிடும் நடவடிக்கையும் தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீ ஜினரதன தொழிற்பயிற்சி நிலையம், ஆடை வடிவமைப்புக் கல்லூரி, கொழும்புப் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இந்நடவடிக்கையில் பங்கேற்றனர்.
இதன்போது, ஏரியின் கரையோரங்கள் மற்றும் சுற்றியுள்ள நடைபாதைகளில் கழிவுகள் அதிகளவில் குவிந்துள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன், பாசி வளர்ச்சி, துர்நாற்றம், நீர் உட்புகும் பகுதிகள், கழிவுகளைத் தடுக்கும் தடுப்புகள் மற்றும் அபிவிருத்தி செய்யக்கூடிய சாத்தியமான இடங்கள் தொடர்பான தகவல்களும் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிகழ்வில் கங்காராம விகாரை, இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இலங்கை கடற்படை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், கல்வி நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
மேலும், நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் A-PAD SL அமைப்பின் தேடல் மற்றும் மீட்புக் குழுவினரும் ஏரியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பேரே ஏரியின் நீரின் தரத்தை மேம்படுத்துவதுடன், அதனை முக்கியமான போக்குவரத்து மற்றும் பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்வதும் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும் என A-PAD SL தெரிவித்துள்ளது.
அத்துடன், ஏரியைச் சூழவுள்ள சமூகங்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினரிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல், சுற்றுச்சூழல் கல்வியை ஊக்குவித்தல் மற்றும் பொறுப்பான கழிவகற்றல் நடைமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியவையும் இம்முன்முயற்சியின் நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.