டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். அலுவலகத்தில் பல மணி நேரம் CID சோதனை
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாண அலுவலகத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று (19.10.2026) பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம், இலக்கம் 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தில், நீதிமன்றத் தேடுதல் ஆணையின் அடிப்படையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமக்குக் கிடைத்த தகவலையடுத்து, யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அலுவலகக் கட்டடத்தையும் அதனைச் சூழவுள்ள வளாகத்தையும் அதிகாரிகள் விரிவாகச் சோதனையிட்டனர்.
பல மணி நேரம் நீடித்த தேடுதலின் முடிவில், டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் கட்சியின் அலுவலக நிர்வாகப் பொறுப்பாளரிடம் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுச் சென்றுள்ளனர்.
சோதனைக்கான குறிப்பிட்ட காரணம் மற்றும் அதன்போது ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டனவா என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை.