சவூதி அரேபியாவின் கிங் ஃபஹ்த் விமான நிலையம் மீது தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு, எட்டு பேர் காயம்!
சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தம்மாம் நகரிலுள்ள கிங் ஃபஹ்த் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் சிலருக்கு சிறிய காயங்களும், ஏனையோருக்கு கடுமையான காயங்களும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், சவூதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலில் அமைந்துள்ள சவூதி அராம்கோ நிறுவனத்தின் வசதியொன்றை இலக்குவைத்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆளில்லா விமானத்தைச் சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்த நிலையில், இந்தச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தீவிரமடையும் தாக்குதல்கள்
யேமனில் ஹூதி படையினருக்கும், சவூதி அரேபியாவின் ஆதரவைப் பெற்ற சர்வதேச அங்கீகாரம் கொண்ட யேமன் அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி ரியாத்திலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்ததாக சவூதி அரேபியா முன்னதாக அறிவித்திருந்தது.
அதேவேளை, ஒக்டோபர் 10ஆம் திகதி குறித்த விமான நிலையம் மீது நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்திருந்தது.
அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு அவசர அறிவுறுத்தல்
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஹூதி படையினரின் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க இராஜதந்திரப் பணியகங்களில் பணியாற்றும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள மேலும் சில அமெரிக்க இராஜதந்திரப் பணியகங்களில் பணியாற்றுவோரின் குடும்ப உறுப்பினர்களையும் வெளியேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், சவூதி அரேபியா மீது ஹூதி படையினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தக்கூடும் என எச்சரித்து, ரியாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் புதன்கிழமை பாதுகாப்பு எச்சரிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
தொடர்ச்சியான தாக்குதல்களால் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு நிலைமை குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.