அட்லாண்டிக் பெருங்கடலுக்கு தனது பெயரைச் சூட்ட விரும்பிய ட்ரம்ப் – மறுத்தார் கூகுள் CEO சுந்தர் பிச்சை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அட்லாண்டிக் பெருங்கடலுக்கு ‘ட்ரம்ப் பெருங்கடல்’ (Trump Ocean) எனப் பெயர் மாற்றம் செய்ய முன்மொழிந்ததாகவும், அதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மறுப்புத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
தெற்கு கரோலினாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே ட்ரம்ப் இந்தத் தகவலைத் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கூகுள் வரைபடத்தில் (Google Maps) அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்ற முடியுமா என சுந்தர் பிச்சையிடம் தாம் கேட்டதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
“சுந்தர், அட்லாண்டிக் பெருங்கடலைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களால் அதைச் செய்ய முடியுமா?” எனத் தாம் கேட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலளித்த சுந்தர் பிச்சை, “இல்லை, இல்லை, இல்லை. இந்த முறை என்னால் அதைச் செய்ய முடியாது” எனக் கூறியதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும், பெருங்கடல்கள் பல நாடுகளின் எல்லைகளுடன் தொடர்புடையவை என்பதால், அவற்றின் பெயர்களை மாற்றுவது ஏனைய புவியியல் இடங்களின் பெயர்களை மாற்றுவதைப் போன்றதல்ல என சுந்தர் பிச்சை விளக்கியதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அட்லாண்டிக் பெருங்கடலின் தற்போதைய பெயரையே தொடர வேண்டுமா என நிகழ்வில் கலந்துகொண்டவர்களிடம் ட்ரம்ப் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் பல புவியியல் இடங்களின் பெயர்களை மாற்றுவதற்கு ட்ரம்ப் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக, மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்க வளைகுடா’ (Gulf of America) எனப் பெயர் மாற்றும் நடவடிக்கையை அவர் முன்னெடுத்திருந்தார். ஒன்டாரியோ ஏரியை ‘அமெரிக்க ஏரி’ (Lake America) என அழைப்பது குறித்தும் அவர் யோசனை முன்வைத்திருந்தார்.
அமெரிக்கப் பயனர்களுக்காக கூகுள் வரைபடத்தில் சில பெயர் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, ஏனைய நாடுகளில் உள்ள பயனர்களுக்கு அந்தந்த நாடுகளின் பயன்பாட்டுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ‘ட்ரம்ப் பெருங்கடல்’ அல்லது ‘அமெரிக்கக் கண்டங்களின் பெருங்கடல்’ (Ocean of the Americas) எனப் பெயர் சூட்டுவது குறித்தும் ட்ரம்ப் முன்னதாகக் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.