கொழும்பு துறைமுகத்தின் 280 மில்லியன் டொலர் சீன முதலீட்டுத் திட்டம் இரத்து!
கொழும்பு துறைமுகத்தில் 280 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த தளவாட மைய அபிவிருத்தித் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று (19) வெளியிட்ட அறிக்கையில், வெளிப்புறச் சூழ்நிலைகள், வர்த்தகக் காரணிகள் மற்றும் பங்குதாரர்களின் தனிப்பட்ட நலன்கள் குறித்து மீளாய்வு செய்த பின்னர், தெற்காசிய வர்த்தக மற்றும் தளவாட மையம் (South Asia Commercial and Logistics Hub – SACLH) நிறுவனத்தின் பங்குதாரர்கள் இத்திட்டத்தைத் தொடர வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தக் கூட்டு முயற்சி நிறுவனத்தில், சீனாவின் China Merchants Port Holdings Company Limited நிறுவனம் தனது முழுமையான துணை நிறுவனத்தின் ஊடாக 70 சதவீத பங்குகளைக் கொண்டிருந்தது. இலங்கை துறைமுக அதிகாரசபையும் Access Engineering PLC நிறுவனமும் தலா 15 சதவீத பங்குகளை வைத்திருந்தன.
கொழும்பு துறைமுகத்தில் நவீன தளவாட வசதிகளை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது. சுமார் 280 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில், 150,000 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்ட தளவாட மையத்தை அமைப்பதே இதன் பிரதான நோக்கமாக இருந்தது.
இந்நிலையில், குறித்த மூன்று பங்குதாரர்களும் முதலீடு செய்திருந்த மொத்தம் சுமார் 29.8 மில்லியன் அமெரிக்க டொலர் பங்குத் தொகையை, அவர்களின் பங்கு விகிதங்களுக்கு ஏற்ப மீள வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. எனினும், இந்த மீளளிப்பு உரிய ஒழுங்குமுறைத் தேவைகள் மற்றும் செயற்பாட்டுச் செலவுகளுக்கு உட்பட்டதாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானம்
கைவிடப்பட்ட திட்டத்திற்குப் பதிலாக, கொழும்பு துறைமுகத்தில் புதிய தளவாட மையமொன்றை அரச–தனியார் பங்காண்மை (Public–Private Partnership – PPP) முறையின் கீழ் அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.
இந்தப் புதிய திட்டத்திற்கான முதலீட்டாளர்கள் போட்டித்தன்மை வாய்ந்த விலைமனுக் கோரல் நடைமுறையின் ஊடாகத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
முன்னைய கூட்டு முயற்சித் திட்டம் கைவிடப்பட்டுள்ள போதிலும், கொழும்பு துறைமுகத்தில் நவீன தளவாட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தமது அர்ப்பணிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை என துறைமுக அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
புதிய அபிவிருத்தி முறைமையின் ஊடாகத் தனியார் முதலீடுகளை ஈர்த்தல், துறைமுகத்தின் செயற்திறனை மேம்படுத்துதல் மற்றும் பிராந்தியத்தின் முக்கிய கடல்சார் போக்குவரத்து மற்றும் தளவாட மையமாக கொழும்பு துறைமுகத்தின் நிலையை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவை எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.