ஒவ்வொரு வகுப்பறைக்கும் 'ஸ்மார்ட் போர்ட்' வழங்கப்படமாட்டாது: பிரதமர் ஹரிணி அமரசூரிய திட்டவட்டம்
பாடசாலைகளின் அனைத்துக் கல்வி நிலைகளுக்கும் அத்தியாவசியமற்றது என்பதால், நாட்டின் ஒவ்வொரு வகுப்பறைக்கும் 'ஸ்மார்ட் போர்ட்' (Smart Boards) சாதனங்களை அரசாங்கம் வழங்காது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்குப் பொருத்தமான வயதிலேயே நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், 'ஸ்மார்ட் போர்டுகளை' கொள்வனவு செய்வதற்காகப் பெற்றோரிடம் பணத்தைச் சேகரிக்க வேண்டாம் எனப் பாடசாலை அதிபர்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
"ஸ்மார்ட் போர்டுகளைக் கொள்வனவு செய்வதற்காகப் பெற்றோரிடம் நிதி வசூலிப்பதைக் கைவிடுமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்துங்கள். மின்னணு சாதனங்களை அவசியமன்றி அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதனால் மாணவர்கள் அதற்கு அடிமையாதல் உட்படப் பல்வேறு சிக்கல்கள் உருவாகக் கூடும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், மாணவர்களின் வயது முதிர்ச்சி மற்றும் கல்வித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, உரியத் திட்டமிடலின் அடிப்படையிலேயே பாடசாலைகளுக்கு 'ஸ்மார்ட் போர்டுகள்' பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.