“மெற்றோ பேருந்துகளில் மகா சங்கத்தினருக்கும் இட ஒதுக்கீடு இல்லை” - நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான சாடல்!
மெற்றோ பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இரட்டைக்கட்டணத்தை செலுத்தியும் நின்று கொண்டு பயணிப்பது மிகவும் அநீதியானது என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்;
"மெற்றோ பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டே பயணிக்க வேண்டியுள்ளது. அதேநேரம் பயணச்சீட்டின் கட்டணமும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இது அநீதி இல்லையா? பௌத்த துறவிகள் கூட நின்று கொண்டே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மெற்றோ பேருந்து நடத்துநர்கள் இவ்வாறு தன்னிச்சையாகச் செயற்பட அனுமதிக்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், "தற்போதுள்ள பேருந்துகளில் 48 பயணிகளை அழைத்துச் செல்ல முடியும். ஆனால், அவர்களின் தன்னிச்சையான தீர்மானங்களின்படி, சுமார் 80 பயணிகள் நின்றுகொண்டே பயணிக்கின்றனர். இன்று எவ்வளவு பெரிய அநீதி நடக்கிறது? அமர்ந்து செல்லும் அதே கட்டணத்தையே நின்றுகொண்டு செல்லும் நபரும் இரட்டிப்பாகச் செலுத்துகிறார்" என்றார்.
பேருந்துகளின் எரிபொருள் பயன்பாடு மற்றும் மின்சாரப் பேருந்துகள் குறித்தும் சுட்டிக்காட்டிய அவர்; "எரிபொருள் பயன்பாட்டைப் பார்க்கும்போது, ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு லீற்றர் டீசல் செலவாகிறது. நாம் மின்சாரப் பேருந்துகளைக் கொண்டுவராததே இதற்குக் காரணம். மின்சாரம் மற்றும் டீசல் மூலம் இயங்கும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் கலப்புப் பேருந்துகளை கொண்டு வந்திருந்தால் இது மிகவும் வெற்றியளித்திருக்கும். இந்த விடயத்தில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்றிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்" எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், மகா சங்கத்தினர் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்துக் குறிப்பிடுகையில்; "வசதிகளை வழங்குவது நல்லதுதான், ஆனால் அந்த வசதிகளை விட மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கக் கூடாது. அவர்கள் பயணிப்பதற்குப் போராட வேண்டியுள்ளது. நேற்று எம்மிடம் வந்த மூத்த மகாநாயக்க தேரர் ஒருவர், பௌத்த துறவிகள் நின்றுகொண்டே பயணிக்க வேண்டியுள்ளதாகக் கூறி ஒரு கடிதத்தை என்னிடம் ஒப்படைத்தார். இந்நாட்டில் மதத் தலைவர்கள் எனக் கூறும்போது, அது பௌத்த துறவிகளை மட்டும் குறிப்பதல்ல; கத்தோலிக்க குருமார்கள் , இஸ்லாமிய மௌலவிகள் என அனைவரையும் உள்ளடக்கியதாகும்" என்று சுட்டிக்காட்டினார்.
புதிய பேருந்துகள் காலப்போக்கில் தேய்மானத்திற்கு உட்படும் என்பதோடு, உதிரிப் பாகங்கள் மற்றும் மேலதிக டயர்கள் மாற்றப்பட வேண்டிய பராமரிப்புச் செலவுகளும் ஏற்படும் நிலையில், இப்பேருந்துகள் உண்மையிலேயே செலவுச் சிக்கனமானவையா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான இதன்போது கேள்வி எழுப்பினார்.