நாடாளுமன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கிறார் திலான் விஜேசிங்க!
அரசு அபிவிருத்தி ஒப்பந்தங்களை வழங்குவதில் ஊழல் எதிர்ப்புச் சட்டங்களை மீறியதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை, அரச-தனியார் பங்களிப்புக்கான தேசிய முகவர் அமைப்பின் (NAPPP) முன்னாள் தலைவரான திலான் விஜேசிங்க முற்றுமுழுதாக மறுத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான பட்டியல் ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார். அதில் திலான் விஜேசிங்கவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அக்டோபர் 9 ஆம் திகதியன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நான் முற்றாக நிராகரிக்கிறேன். இவ்வாறானதொரு வழக்கு அல்லது என் மீது சுமத்தப்பட்டுள்ள உத்தியோகபூர்வமான அல்லது உத்தியோகபூர்வமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
ஊடக அறிக்கைகளின்படி, இந்தக் குற்றச்சாட்டுகள் 2010 ஆம் ஆண்டைச் சார்ந்தவை எனக் கருத முடிகிறது. அக்காலப்பகுதியில் நான் எந்தவொரு அரச பதவியையும் வகிக்கவில்லை. 'ஓவர்சீஸ் ரியல்டி சிலோன் பிஎல்சி' (Overseas Realty Ceylon PLC) நிறுவனத்தின் குழும மேலாண் இயக்குநராகவே பணியாற்றினேன்.
2017 முதல் 2019 வரையிலான காலப்பகுதியிலேயே அரச-தனியார் பங்களிப்புக்கான தேசிய முகவர் அமைப்பின் (NAPPP) முதலாவது தலைவராக நான் பணியாற்றினேன். அதற்காக எந்தவொரு ஊதியத்தையும் பெறாமல் கௌரவ அடிப்படையிலேயே சேவை ஆற்றினேன்.
நிதி அமைச்சின் கீழ் இயங்கிய அந்த முகவர் அமைப்பிற்கு, அரசு அபிவிருத்தி ஒப்பந்தங்களை வழங்குவதற்கோ அல்லது பரிந்துரைப்பதற்கோ சட்டப்பூர்வ அதிகாரம் எதுவும் இருக்கவில்லை. அத்துடன் அத்தகைய ஒப்பந்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவும் இல்லை.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில் எனது பெயர் எதற்காகச் சேர்க்கப்பட்டது என்பது தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கோரி, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் அலுவலகத்தை நான் தொடர்புகொண்டுள்ளேன்.
தற்போது எனக்கு எதிராக எந்தவொரு வழக்கும் நிலுவையில் இல்லை என்பதோடு, சட்ட அமலாக்க முகவர் அமைப்புகள் எதுவும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பாக என்னிடம் இதுவரை வாக்குமூலம் எதையும் கோரவில்லை.
இது தொடர்பில் உத்தியோகபூர்வ விசாரணைகள் எவையும் ஆரம்பிக்கப்பட்டால், அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க நான் தயார்.
அத்துடன், அன்றைய நாடாளுமன்ற விவாதங்களின் உத்தியோகபூர்வ ஹன்சாட் அறிக்கை இதுவரை வெளியாகவில்லை என்றும், அது அடுத்த வாரமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நபர் ஒருவர் மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது, அவரது நற்பெயருக்கும் நிதி சார்ந்த நிலைமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்ட திலான் விஜேசிங்க, நாடாளுமன்றப் பதிவுகளில் ஏற்பட்டுள்ள இந்தத் தவறை உடனடியாகத் தெளிவுபடுத்தி திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.