கச்சத்தீவு பிரச்சினை: இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பை வரவேற்பதாக இலங்கை மீன்பிடி அமைச்சர் அறிவிப்பு
கச்சத்தீவு விவகாரத்தில் இந்திய எல்லைகளைத் தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தவிர்க்குமாறு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தினை இலங்கை அரசாங்கம் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை மீன்பிடி, நீரியல் மற்றும் பெருங்கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கடல்சார் எல்லையை மதித்து நடப்பதன் முக்கியத்துவத்தை இந்திய உச்சநீதிமன்றத்தின் இந்த அவதானிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது, நீதியரசர் சஞ்சய் குமார் தலைமையிலான அமர்வு இக்கருத்தினைப் பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி, குறிப்பாக கச்சத்தீவுப் பகுதியைச் சுற்றி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதத் தடுக்கும் வகையில் அவர்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டியதன் அவசியத்தை நீதியரசர் தனது அமர்வில் வலியுறுத்தியிருந்தார்.
"இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைய வேண்டாம் எனத் தமிழ்நாட்டு மீனவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்ற இந்திய உச்சநீதிமன்றத்தின் கருத்து வரவேற்பிற்குரியது" என அமைச்சர் சந்திரசேகர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடல் வளங்களையும், சூழலையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் எனத் தெரிவித்த அமைச்சர், வெளிநாட்டுப் படகுகளின் சட்டவிரோத மற்றும் அழிவுகரமான மீன்பிடி முறைகள் குறித்துத் தனது கவலையை வெளியிட்டார். குறிப்பாக, கடல் அடியை அழிக்கும் அடிமடி வலைப் பயன்பாடு இலங்கையின் வடக்கு மாகாண மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைவதாகவும் சுட்டிக்காட்டினார்.
1974 ஆம் ஆண்டில் கச்சத்தீவு தொடர்பாகவும், 1976 ஆம் ஆண்டில் கடல்சார் எல்லைகள் மற்றும் மீன்பிடி உரிமைகள் தொடர்பாகவும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்தும் அமைச்சர் சந்திரசேகர் மீண்டும் சுட்டிக்காட்டினார். இவ்வொப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர புரிதலின் அடிப்படையில் அமைந்தவை என்றும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், கடல்சார் எல்லைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் இதற்கு நிலையான தீர்வுகளைக் காண வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதனிடையே, இலங்கைக்கான தனது விஜயத்தின் போது தாம் அவதானித்த விடயங்களைக் குறிப்பிட்ட நீதியரசர் சஞ்சய் குமார், கடற்கரைகள் மற்றும் பொது இடங்களைத் தூய்மையாகப் பராமரிப்பதிலும் சூழலைப் பாதுகாப்பதிலும் இலங்கை மக்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின் சட்டபூர்வ செல்லுபடித் தன்மை குறித்து இந்திய உச்சநீதிமன்றம் இன்னும் இறுதித் தீர்ப்பை வழங்கவில்லை. கச்சத்தீவு வழக்கில் மேலதிக விசாரணைகள் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மீனவ சமூகங்களைப் பாதுகாப்பதற்கும், கடல் வளங்களைப் பேணவதற்கும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் நீதிமன்றத்தின் இந்த அவதானிப்புகள் மிக முக்கியமானவை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.