ஈரானியக் கப்பல்கள் விவகாரம்: பிராந்தியப் பேச்சுவார்த்தைக்கு முன்னணி சோசலிசக் கட்சி அழைப்பு
ஈரானுடன் தொடர்புடைய கடல்சார் பிரச்சினைகள் குறித்து பிராந்திய அளவிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு முன்சணணி சோசலிசக் கட்சி (FSP) இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் சம்பந்தப்பட்ட மோதல் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள கப்பல்களுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவது தொடர்பாக தெற்காசிய நாடுகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
அக்டோபர் 09 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், ஈரானுடன் தொடர்புடைய சுமார் 15 முதல் 25 வரையிலான எண்ணெய் தாங்கிப் படகுகள் இலங்கையின் கடல் எல்லைக்கு அப்பால் பயணம் செய்ய முடியாமல் நடுக்கடலில் தங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இவற்றில் சில கப்பல்களில் உணவு, குடிநீர் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், உதவி கோரி இலங்கைக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பில் உத்தியோகபூர்வ கோரிக்கைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தமையை அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், ஈரானியக் கப்பல்களுக்கு உதவி வழங்க வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக 'தி வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்' (The Wall Street Journal) பத்திரிகையில் வெளியான செய்தியையும் சுட்டிக்காட்டியுள்ள முன்ணணி சோசலிசக் கட்சி, அத்தகைய அழுத்தங்கள் எதுவும் பிரயோகிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மறுத்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.
மனிதநேய அடிப்படையில் இதற்குப் பதிலளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அக்கட்சி, புவிசார் அரசியல் தகராறுகளில் சிக்கிக்கொள்வதைத் தவிர்த்து, பாதகமான சூழலில் தவிப்பவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
மேலும், 1971 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் இந்தியாவின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட முன்முயற்சியை நினைவுகூர்ந்த அக்கட்சி, இந்தியப் பெருங்கடலை அமைதி வலயமாக்கும் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என யோசனை முன்வைத்துள்ளது.
இச்சூழ்நிலைக்கு ஒருங்கிணைந்த பிராந்திய தீர்வை எட்டுவதற்காகத் தெற்காசிய நாடுகளுடன் அவசரப் பேச்சுவார்த்தைகளைக் கூட்டுமாறும் இலங்கை அரசாங்கத்தை முன்னணி சோசலிசக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.